பினாங்கு பக்காத்தான் பேரணியில் 100,000 கூடினர்

rallyபினாங்கு பக்காத்தான் ராக்யாட் நேற்று பல கூட்டங்களை நடத்தியது. அவற்றுள் எஸ்பிளனேட்டில் நடைபெற்ற  மாபெரும் பேரணியும் அடங்கும். நள்ளிரவு வரை நீடித்த அந்தப் பேரணியில் 100,000க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

பினாங்குத் தீவில் பக்காத்தான் கூட்டணி நடத்தியுள்ள பெரிய பேரணி இதுவாகும். அங்கு  ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடையாக 505,000 ரிங்கிட் திரட்டப்பட்டது.

மாலை 5 மணி தொடக்கம் கேளிக்கை விழாவை போல நடத்தப்பட்ட அந்தப் பேரணிக்காக மேடையும்  அமைக்கப்பட்டிருந்தது. அங்காடிக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. டிஏபி-யும் தனது பொருட்களை விற்பனை  செய்தது. உள்ளூர் இசைக் குழுக்கள் இசை நிகழ்ச்சியில் பங்கு கொண்டன. பினாங்கு நகர மண்டபக் கட்டிடத்திற்கு வெளியில் உள்ள திடலில் இரவு எட்டு மணி வாக்கில் கூட்டம் நிரம்பி  விட்டது.

டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பேசத் தொடங்கியதும் கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாம்  இப்போது கேலாங் பாத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பினாங்கில் ‘வாக்குகள் வாங்கப்படுவதாக’ தகவல் கிடைத்ததும் தாம் இங்கு வந்துள்ளதாக அவர் சொன்னார்.

பண அரசியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு என் மருமகள் பெட்டி சியூ-வும் மற்ற ஆதரவாளர்களும்  மொட்டையடித்துக் கொண்டது எனக்கு மிகவும் ஆத்திரத்தை மூட்டி விட்டது,” என்றார் அவர்.

rally1நேற்று காலையில் கெக் லோ சி கோவிலில் அவர்கள் மொட்டையடித்துக் கொண்டனர்.

“நமது அரசியல் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போய் விட்டது ?” என அவர் வினவினார்.

“பினாங்கு மக்களும் மலேசியர்களும் கண்ணீர் சிந்துகின்றனர். அந்த நிலைக்கு யார் பொறுப்பு ? என லிம்  கேட்டார்.

கூட்டத்தினர் “கோ சூன் லாய்!” என உரத்த குரலில் கூறினர்.

பிரபலமான சொத்து மேம்பாட்டாளரான கோ, இரண்டு நாட்களுக்கு முன்னார் ஒரே மலேசியா விருந்தின் போது 100 ரிங்கிட்டை ரொக்கமாக விநியோகம் செய்ததால சீன நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது.

பணத்தை வாங்க கூட்டத்தினர் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் நிலைமை குழப்பமடைந்ததும் அதற்குப்  பதில் 20 மில்லியன் ரிங்கிட் அற நிதி ஒன்றை அமைக்க கோ முடிவு செய்தார்.

என்றாலும் வாக்குகள் வாங்கப்படும் சூழ்நிலைக்கு பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் ரசாக்கே பொறுப்பேற்க  வேண்டும் என்பதை கிட் சியாங் கூட்டத்தினருக்கு நினைவுபடுத்தினார். ஏனெனில் அத்தகைய அப்பட்டமான  நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளார் என அவர் சொன்னார்.

“பிஎன் வாக்குகளை வாங்கும் நடவடிக்கை பினாங்கு மக்களை அவமானப்படுத்துவதாகும். மே 5ம் தேதி, நஜிப்  பிஎன் -னைச் சேர்ந்த கடைசிப் பிரதமர் என்பதை பினாங்கு மக்கள் நிர்ணயிக்க வேண்டும்,” என லிட் சியாங்  சொன்ன போது கூட்டத்தினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

அந்த நிகழ்வில் டிஏபி தலைவர் கர்பால் சிங், தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பாஸ் துணைத் தலைவர்  முகமட் சாபு உட்பட பல பக்காத்தான் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

TAGS: