ஐஜிபி: முக்கிய பெருமக்கள் நாட்டைவிட்டு ஓடுவார்கள் என்ற வதந்தியை நம்பாதீர்கள்

1 igpநாட்டில் பாதுகாப்பு தளர்ச்சி கண்டிருக்கிறது என்றும் தேர்தல் முடிந்ததும் சிலர் நாட்டைவிட்டுத் தப்பி ஓடுவார்கள் என்றும் கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பாதுகாப்பை நிலைநிறுத்தும் கடமையை போலீஸ் செவ்வனே செய்யும் என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அஃப்  போலீஸ் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார் உறுதி கூறினார்.

முக்கியமாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முடிவை மக்கள் ஏற்க வேண்டும் என்றவர் சொன்னார். அதை எதிர்த்து தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது.

“வாக்களிப்பு நாளில் போலீஸ் படை மொத்தமும் முக்கிய இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்படும். போலீசுக்கும் குடிநுழைவுத் துறைக்குமிடையில் நல்ல ஒத்துழைப்பு உண்டு. எனவே அவர்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுவோம்.

“எங்கள் கடமையைத் தொழில்நேர்மையுடன் செய்வோம்”, என்றாரவர்.

‘எதிர்மறை ஊகங்கள் வேண்டாம்’

அரசாங்கத்தில் மாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக சிலர் நாட்டைவிட்டு வெளியேற முயன்றால் அல்லது முக்கிய ஆவணங்களை ஒழிக்க முயன்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறினார்.

அதை மேலும் விவரிக்குமாறு கேட்டதற்கு எதிர்மறையான ஊகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என்றவர் கேட்டுக்கொண்டார்.

“ஏன் எதிர்மறையான தோற்றத்தை உருவாக்க முனைகிறீர்கள். அரசுத்துறைகள் அவற்றின் கடமையச் சரிவரச் செய்யும்”, என்றார்.

போலீசின் பாரபட்சமின்றி செயல்படும் தன்மையையோ தொழில்நேர்மையையோ சந்தேகிக்க வேண்டாம் என்றவர் வலியுறுத்தினார்.

வாக்களிப்பதற்காக அந்நியர்கள் பெருந் திரளாக நாட்டுக்குள் வருவார்கள் என்று கூறும் வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று இஸ்மாயில் கூறினார்.

அதன் தொடர்பில் தகவல் வைத்திருப்பவர்கள் போலீசில் புகார் செய்யலாம்.

“அடிப்படையின்றி இப்படிப்பட்ட வதந்திகள் பரப்பப்படுகின்றன”,என்று கூறியவர் சட்டப்பூர்வ தேர்தல் நடைமுறைகளைக் கெடுப்பதற்காகவே அவை பரப்பப்படுகின்றன என்றார்.

பொதுமக்கள் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு மற்றவர்களின் அடையாள அட்டைகளைச் சோதனையிடுதல், ஆவி வாக்காளர்களைப் பிடித்தல், பேருந்துகளைத் தடுத்து நிறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 

 

 

 

TAGS: