‘பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்ற முதலில் சிறு வெற்றிபெற்ற இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’

1 electionதேர்தல் கண்ணோட்டம் – சிலாங்கூர் : பாரிசான் நேசனல் அடிக்கடி நாட்டின் பணக்கார மாநிலமான சிலாங்கூரைக் கைப்பற்றப்போவதாக் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அதற்கு பிஎன் பக்காத்தான் ரக்யாட் வசமுள்ள சில இடங்களைப் பிடிக்க வேண்டும். ஆனால், அதற்குமுன் அது கடந்த பொதுத் தேர்தலில் சிறுவெற்றிபெற்ற குறைந்தது ஒன்பது இடங்களைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அது முக்கியம்.

2008 பொதுத் தேர்தலில் பிஎன், 56 சட்டமன்ற இடங்களில் 24 இடங்களைதான் வெற்றிபெற முடிந்தது. அதுவும் ஒன்பது இடங்களில் 45-இலிருந்து 700 வாக்குகள் வேறுபாட்டில்தான் வெற்றிபெற்றது.

பிஎன் சிலாங்கூரில் ஓர் எளிய பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இப்போது இருப்பதைவிட மேலும் ஐந்து இடங்களைப் பெற வேண்டும். ஆனால், அது ஏற்கனவே குறைந்த வாக்கு வேறுபாட்டில் வென்ற இடங்களில் நான்கை இழந்தால்கூட பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஜாம்ஜாம் என்று வாகை சூடும்.

கடந்த தேர்தலில், சிலாங்கூரில் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் வெல்லப்பட்ட சட்டமன்றத் தொகுதி ஸ்ரீசெர்டாங். பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கிய இடம் அது.

அங்கு 2008 தேர்தலில், சதிம் டிமான், பாஸின் அஹ்மட் இட்சாம் அஹமட்டை எதிர்த்துப் போட்டியிட்டு 45 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றார். இப்போது அவர் போட்டியிடவில்லை. அவரின் இடத்தில் முகம்மட் யூசுப் முகம்மட் இயோசின் களமிறக்கப்பட்டுள்ளார். சதிம், 1995-இலிருந்து அத்தொகுதிக்கு நல்ல சேவையாற்றி வந்திருப்பவர் என்று பெயர் பெற்றிருப்பதால் இந்த மாற்றம் ஓரளவு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம்.

இது போக, இம்முறை சீனர்களின் ஆதரவு நாடு முழுவதும் பக்காத்தானுக்கு ஆதரவாக திரும்பி இருப்பதால் இங்கும்  அதுவே நிகழ்ந்து பாஸ் வேட்பாளர் நூர் ஹனிம் இஸ்மாயிலுக்கு வெற்றியைத் தேடித் தரலாம்.

1 elect ngஸ்ரீசெர்டாங் வாக்காளர்களில் 46 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 36 விழுக்காட்டினர் சீனர்கள், 16 விழுக்காட்டினர் இந்தியர்கள். சீனர்களும் மலாய்க்காரர்களும் முன்னைக் காட்டிலும் இப்போது பக்காத்தானை அதிகம் ஆதரிப்பதை அண்மைய ஆய்வு ஒன்று காட்டியது.

சிறுவெற்றிபெற்ற இன்னொரு இடம் செகிஞ்சான். அது, டிஏபி-இன் இங் சுயி லிம் (படத்தில் நடுவே இருப்பவர்), மசீசவின் புவா பூன் சூனை 190 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்ற இடம்.

இப்போது கெக் செங் ஹூயும் இங்கும் அத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.  அது, சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு தொகுதி. அங்கு சீனர்கள் 57 விழுக்காட்டினர், மலாய்க்காரர்கள் 39 விழுக்காட்டினர், இந்தியர்கள் 2 விழுக்காட்டினர்.

வட சிலாங்கூரில் பிஎன்னுக்குச் சாதகமான சூழல்

வட சிலாங்கூரில், புறநகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும், குறிப்பாக, சாபாக், சுங்கை ஆயர் தாவார் போன்ற இடங்களில்  பிஎன்னுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

1 elect lastஅவ்விரு இடங்களிலும் 2008-இல் பாஸ் போட்டியிட்டது. இரண்டிலும் பிஎன்தான் வென்றது. ஆனால், குறைந்த பெரும்பான்மையில்தான் வெல்ல முடிந்தது-  சுங்கை ஆயர் தாவாரில் 123 வாக்குகளிலும் சாபாக்கில் 117 வாக்குகளிலும்.

இரண்டுமே மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் இடங்களாகும். சுங்கை ஆயர் தாவாரில்  83 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். சாபாக்கில் 79 விழுக்காட்டினர்.

மலாய்க்காரர்களில் குறைந்த எண்ணிக்கையினர் பக்காத்தானுக்கு ஆதரவாக திரும்பினாலும் பிஎன்னுக்கு ஆபத்தாக முடியும்.

இந்தியர்களின் ஆதரவு பிஎன்னுக்கு மீண்டும் திரும்பியுள்ளது என்று பிஎன் நம்பிக்கையுடன் இருப்பதால் புக்கிட் மெலாவாதியில் அது வெற்றிபெறலாம் என நினைக்கிறது. இப்போது அந்தச் சட்டமன்ற இடம் பிகேஆர் வசமுள்ளது.

அதில், இந்திய வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்- 30 விழுக்காட்டினர். மலாய்க்காரர்கள் 57 விழுக்காட்டினர், சீனர்கள் 12 விழுக்காட்டினர்.

அது 2008-இல் பிகேஆரின் எம். முத்தையா வெற்றிபெற்ற இடம். 297 வாக்குகள் பெரும்பான்மையில்தான் அவர் அதை வென்றார். இப்போது அவருக்குப் பதிலாக முன்னாள் காப்பார் எம்பியான எஸ். மாணிக்கவாசகம் அங்கு களமிறக்கப்படுகிறார். தம் ஆளுமையைக் கொண்டு இந்தியர்களின் ஒன்றுபட்ட ஆதரவைப் பெற அவர் முயல்வார்.

ஆனால், கடந்த தேர்தலைப்போல் பிகேஆர், இந்தியர்களின் வாக்குகளைப்பெற இன்னொரு இந்திய வேட்பாளருடன் போட்டிபோடும் நிலை அங்கு இருக்காது. ஏனென்றால், இம்முறை மஇகா அந்த இடத்தை அம்னோவுக்கு “இரவல்” கொடுத்து விட்டது. அம்னோ வேட்பாளராக அங்கு களமிறங்கியுள்ளார் ஜகிரான் ஜேக்கோமா.

கோலா லங்காட் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இரண்டு  சட்டமன்ற இடங்கள் அடங்கியுள்ளன- தெலுக் டத்தோவும் மோரிப்பும். இவற்றில் முறையே டிஏபி-யும் பிஎன்னும் குறைவான பெரும்பான்மையில் வெற்றி பெற்றன.

தெலுக் டத்தோவில் டிஏபி-இன் பிலிப் டான் சூன் சுவி 698 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றார். அது சீனர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் இம்முறை டிஏபிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம். ஆனால், டிஏபி, மசீச இரண்டுமே அங்கு புதுமுகங்களைக் களமிறக்கியுள்ளன.  இது வெற்றிக்குத் தடங்கலாக இருக்கலாம்.

அதற்குப் பக்கத்தில் உள்ள மோரிப், 59 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதி. அங்கு பிஎன்னின் ஹஸிமான் சிதோம் 286 வாக்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இப்போது ஹஸிமான் அதைத் தக்க வைத்துக்கொள்ள போட்டியிடுகிறார்.

புதிய வாக்காளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

குறைந்த பெரும்பான்மையில் வெற்றிகொள்ளப்பட்ட மேலும் மூன்று இடங்கள், சுபாங்கில் பாயா ஜெராஸ், செலாயாங்கில் குவாங், தாமான் டெம்ப்ளர் ஆகியவையாகும். இவற்றில் சிறுபெரும்பான்மையில் பிஎன் வெற்றி பெற்றது. இவை எல்லாமே மலாய் வாக்காளர்கள் அதிகம் வாழும் இடங்களாகும்.

பெர்மாத்தாங், தஞ்சோங் காராங்கில் உள்ளது. பிஎன் கோட்டையாகக் கருதப்படும் அந்த இடத்தில் பிஎன்னின் சுலைமான் ரசாக் 608-வாக்குப் பெரும்பான்மையில்தான் வெற்றிபெற முடிந்தது.

சிறுவெற்றிபெற்ற இன்னொரு இடம் கோலா குபு பாரு. 2008-இல் மசீசவின் வொங் கூன் முன் 448 வாக்குகள் கூடுதலாக வெற்றிபெற்ற இடம் அது. இம்முறை  மசீச,  ‘இழுவை வண்டி’ ராணி எனப் பெயர்பெற்ற ஜெஸ்ஸி ஊயை (இடம்) அங்கு நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்துக் களமிறங்கும் டிஏபி-இன் லீ கீ ஹியோங்கும் புதியவரே.

இவர்களுடன் மூன்று சுயேச்சைகள் போட்டியில் குதித்துள்ளார்கள். இதனால் அங்கு முடிவை முன்னறிவது சிரமமாக உள்ளது.

பிஎன் பக்காத்தானிடமுள்ள இடங்களில் ஊடுருவுவதற்குமுன் சிறுபெரும்பான்மையில் வென்ற இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவை அமைந்துள்ள இடங்களையும் அவற்றின் வாக்காளர் அமைப்பையும் பார்க்கையில் அது அவ்வளவு எளிதாக இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது.

சிலாங்கூரில் 400,000 புதிய வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவர்களில் பலர் பிஎன் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக சிலாங்கூரில் வாக்காளர்களாக நடப்பட்டவர்களாக இருக்கலாம் என்று பக்காத்தான் கருதுகிறது. அதை நினைத்து அது அஞ்சுகிறது.

TAGS: