லெம்பா பந்தாய் வாக்காளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக புகார்

1lembahநாட்டின் போட்டிமிகுந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான லெம்பா பந்தாயில், பிஎன், வாக்குகளுக்கு ரொக்கப் பணம் கொடுத்ததாக நேரில் கண்டவர்கள் புகார் செய்துள்ளனர்.

1 fadzilஸ்ரீபந்தாய் ஸ்கோலா ரெண்டா அகாமாவிலும் எஸ்கே பங்சாரிலும் அவ்வாறு நடந்ததாக அத்தொகுதிக்கான நடப்பு எம்பி நுருல் இஸ்ஸாவின் உதவியாளர் பாஃமி பாஃட்சில் (வலம்)  தெரிவித்தார்.

20திலிருந்து 30 பேர் அங்கு போடப்பட்டிருந்த கூடாரங்களுக்குச் சென்று பற்றுச்சீட்டுகள் பெறுவதைப் பார்க்க முடிந்ததாக தம்மிடம் கூறப்பட்டது என்றாரவர்.

விசாரித்துப் பார்த்ததில் அந்தப் பற்றுச் சீட்டுகள் ‘வெளியூர் வாக்காளர் துறை’வழங்கியவை என்பதும் ஸ்ரீபந்தாய் அடுக்குமாடி சென்று அவற்றைக் காண்பித்து ரிம200 ரொக்கம் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் தெரிய வந்தது.

“இது வாக்குகளைப் பெறுவதற்காக மக்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஒரு கட்சி ஈடுபட்டிருப்பதைக் காண்பிக்கிறது.

“அக்கறையுள்ள ஒரு வாக்காளர் அச்சம்பவத்தைக் காண்பிக்கும் படங்களைக் கைபேசி வழி எனக்கு அனுப்பி வைத்திருந்தார்”, என்றாரவர்.

இவ்விவகாரம் பற்றி பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பாஃமி கூறினார். அம்பிகா, பெர்சே அதன் தொண்டர்களை அனுப்பி அவ்விவகாரத்தை ஆராயும் என்று கூறியுள்ளார்.

இன்னொரு அக்கறையுள்ள வாக்காளர், சந்தேகத்துக்குரிய மியான்மார் நாட்டவர்  அறுவர் எஸ்எம்கே ஸ்ரீ பந்தாயில் வாக்களிக்க முயன்றதை பிகேஆர் ஆதரவாளர்களுக்குத் தெரியப்படுத்தியதாகவும் பாஃமி கூறினார்.

“அவர்கள் ஒரு வேனில் அழைத்துவரப்பட்டு வாக்களிப்பு மையத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்கள்”. ஆனால், அவர்கள் வாக்களிப்பதினின்றும் தடுக்கப்பட்டதாக தெரிகிறது.

லெம்பா பந்தாயில் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸாவை எதிர்த்து பராமரிப்பு அரசின் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் ராஜா சைனலும் சுயேச்சையான ருஸ்லி பாபாவும் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் பல நீண்ட வீடுகளுக்கு இன்று காலை பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக டிவிட்டரில் கூறியிருந்தார்.

பாரு, லிம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்ப்பவர் பிஎன்னின் ஹஸ்பி ஹபிபுல்லா.

 

 

TAGS: