13வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது

01புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய 13வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. 15 நாள் பிரச்சாரக் காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தேர்தல் நாட்டு வரலாற்றில் மிக நெருக்கமான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது “அனைத்து தேர்தல் போராட்டங்களுக்கும் அன்னை” எனவும் வருணிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயாவை நெருங்கி விட்டதாக பக்காத்தான் ராக்யாட் கூறும் வேளையில் பிஎன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகின்றது.

மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 505 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டி நிகழ்கின்றது. பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகின்றது. 270 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். நாட்டு தேர்தல் வரலாற்றில் இவ்வளவு சுயேச்சைகள் போட்டியிடுவது இதுவே முதன் முறை.

என்றாலும் சரவாக் சட்டமன்றத்தில் உள்ள 71 இடங்களுக்குத் தேர்தல் நிகழாது. ஏனெனில் அது 2011ல் தான் சட்டமன்றத் தேர்தலை நடத்தியது.

பிற்பகலில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என ஆரூடம் கூறப்பட்டுள்ளதால் முற்பகலிலேயே வாக்களித்து விடுமாறு வாக்காளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவுக்கு வரும்.

இரவு எட்டு மணி வாக்கில் முதல் முடிவுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் புதிய வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர் எண்ணிக்கை மூன்று மில்லியன் அதிகரித்துள்ளது.

பாகாங் பெக்கானில் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோரும் காலை மணி 9.33 வாக்கில் Sekolah Sultan Haji Ahmad Shah-வில் வாக்களித்தனர்.

ஜோகூர் பாகோவில் துணைப் பிரதமர் முஹிடின் யாசின் SM Sri Muar-ல் காலை மணி 8.20 வாக்கில் வாக்களித்தார் என பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

லெம்பா பந்தாயில் அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் காலை மணி 9.41 வாக்கில் வாக்களித்தார். அவர் அனுப்பிய டிவிட்டர் செய்தி அதனைத் தெரிவித்தது.

ஜோகூர் சிகாமட் SMK Buloh Kasap-ல் பிஎன் சிகாமட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் காலை மணி 9.22க்கு தமது வாக்குகளை செலுத்தினார்.

தாம் தோல்வி காணக் கூடும் என ஆரூடம் கூறப்பட்டுள்ளது குறித்து கருத்துத் தெரிவிக்க சுப்ரமணியம் மறுத்து விட்டார்.  தாம் சாதகமான சிந்தனையுடன் இருக்க விரும்புவதாக அவர் சொன்னார்.

“சிகாமட் தொகுதியில் நாங்கள் எங்கள் வேலையைச் செய்துள்ளோம். சிறிய பெரும்பான்மையில் நான் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன்,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.

“போட்டி கடுமையானதாக இருந்தாலும் பிஎன் -னுக்கான இந்தியர் ஆதரவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மலாய்க்காரர் ஆதரவு வலுவாக உள்ளது. அதனால் 2008ம் ஆண்டைக் காட்டிலும் பிஎன் கூடுதல் இடங்களை வெல்ல முடியும்,” என்றார் அவர்.

இதனிடையே தமக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டால் நாட்டில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக பெர்மாத்தாங் பாவ்-வில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

தேர்தல் நடைமுறைகள் குறித்து தாம் இதுவரையில் மனநிறைவு கொண்டுள்ளதாகக் கூறிய அவர், நாடு முழுவதும் நிலவரத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றார்.

டாக்டர் மகாதீர் முகமட் வெளிநாடு சென்று விட்டதாக கூறப்படுவது பற்றிக் குறிப்பிட்ட அவர் தாமும் அதனைக் கேள்விப்பட்டதாகச் சொன்னார்.

“அவர் எந்த மருத்துவ சிகிச்சைக்குச் சென்றாலும் அவர் குணமடைய நான் வாழ்த்துகிறேன்.”

மகாதீர் நேற்றிரவு வரை கெடாவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

ஜோகூர் கேலாங் பாத்தா டிஏபி வேட்பாளர் லிம் கிட் சியாங், ஸ்கூடாயில் உள்ள SJK(C) Pu Sze-வுக்கு ஸ்கூடாய் தொகுதி வேட்பாளர் டாக்டர் பூ செங் ஹாவ் -உடன் வருகை அளித்தார்.

TAGS: