சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 1.2 மில்லியன் அல்லது 58.95 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
அந்த விவரத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் பெர்னாமாவிடம் தெரிவித்தது.
நெகிரி செம்பிலானில் பிற்பகல் ஒரு மணி வரையில் மொத்தமுள்ள 555,982 வாக்காளர்களில் 58.35 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டனர்.
மலாக்காவில் நண்பகல் வரையில் அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 424,519 வாக்காளர்களில் 40 விழுக்காட்டினர் வாக்குகளை செலுத்தி விட்டனர்.
பேராக்கில் உள்ள 1.36 மில்லியன் வாக்காளர்களில் காலை 11 மணி வரையில் 30 விழுக்காட்டினரும் பாகாங்கில் உள்ள 736,111 வாக்காளர்களில் 29.44 விழுக்காட்டினரும் வாக்களித்துள்ளனர்.
கிளந்தானில் முற்பகல் 11.30 வாக்கில் 13.19 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தார்கள். அந்த மாநிலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 918,573 ஆகும்.
——————————————
நண்பகல்: சிரம்பானில், வானிலை நன்றாக இருந்ததால் பல வாக்காளர்கள் காலையிலேயே வாக்களித்தனர். ஆனாலும், நகரில் எங்கு பார்த்தாலுல் வாகன நெரிசல்தான்.
சாபாவின் கோட்ட கினாபாலுவில் நிலைமை வேறு விதமாக இருந்தது. இங்கு வெய்யில் கொளுத்துகிறது. அதனால் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை அதிகம் காண முடியவில்லை.
இளைஞர்களை மட்டுமே அங்கிருந்தனர்.
“வெய்யில் தணிந்ததும் வாக்காளர்கள் வருவார்கள்”, என்று மக்தாப் சாபா வாக்களிப்பு மையத்தில் எஸ்ஏபிபி-இன் தேர்தல் ஏஜெண்ட் ஒருவர் சொன்னார்.
இதுவரை, வாக்காளர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வந்திருக்கலாம் என்றவர் மதிப்பிட்டார்.
தேர்தல் ஏஜெண்டுகளுக்கும் வெய்யில் ஒரு பிரச்னைதான். அவர்கள் வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஆங்காங்கே நிழலாய் இருந்த இடங்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.
——————————————
ஜோகூர், பெக்கான் நானாஸ்
ஜோகூரில் பல இடங்களில் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை சரியில்லை என்று டிஏபி வேட்பாளர் டான் ஹொன் பிங் குறைகூறியுள்ளார். உதாரணத்துக்கு எஸ்ஜேகே யுன் மிங்(சீ)-கில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டுகளில் முத்திரை குத்தப்படவில்லை.
மூவார் எஸ்கே பாரிட் கெரோமா டாராட் வாக்களிப்பு மையத்தில் ஒரு அலுவலர், “வாக்குச்சீட்டுகளில் முத்திரை குத்தாதது பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று கூறினாராம்.
எஸ்எம்கே ஸ்ரீமெர்சிங்கில், 29-வயது வாக்காளர் ஒருவர் தன் வாக்கிச் சீட்டில் முத்திரை குத்தப்படாதது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.
மெர்சிங்கில் ஒரு வாக்களிப்பு மையத்தில் வாக்குச்சீட்டுகளில் குறியிட பேனாவோ பென்சிலோ கொடுக்கப்படவில்லை. வாக்காளர்கள் விரலில் தடவப்பட்ட அழையா மையைப் பயன்படுத்தி வாக்குச்சீட்டுகளில் பெருக்கல் குறியைப் போட்டிருக்கிறார்கள்.