பேராக் பக்காத்தான்: ‘ஆவி வாக்காளர்களே’ தோல்விக்குக் காரணம்

Perak Pakatanபேராக்கில் குறுகிய தோல்விகண்டு பக்காத்தான் ரக்யாட், மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது.

மாநில பக்காத்தான் தலைவர் முகம்மட் நிஜார் ஜமாலுடின் ‘ஆவி வாக்காளர்களும்’   வாக்காளர்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டதும்தான் தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார்.

பேராக் சட்டமன்றத்தின் 59 இடங்களில் பிஎன்னுக்கு 31 இடங்களும் பக்காத்தானுக்கு 28 இடங்களும் கிடைத்தன. 18 இடங்களை வென்ற டிஏபிதான் இப்போது அம்மாநிலத்தின் பெரிய மாற்றரசுக் கட்சியாகும்.

தேர்தல் முடிவைப் பக்காத்தான் ஏற்கிறதா இல்லையா என்பதை நிஜார் குறிப்பிடவில்லை. ஆனால், மக்களின் தேர்வை மதிப்பதாக சொன்னார்.

அதிகாலை மணி 2.30க்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அம்மாநிலத்தில் 30,524 அடையாளம் தெரியாத வாக்காளர்கள் இருப்பதாகக் கூறினார்.

“சில தொகுதிகள் சிறு பெரும்பான்மையில்தான் இழக்கப்பட்டன. விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. தகுதிவாய்ந்த எங்கள் வேட்பாளர்கள் தோற்றார்கள் என்றால் அதற்கு ஊழலும் பணமும்தான் காரணம்”, என்றவர் குறைகூறினார்.

பேராக் பிஎன் தலைவர், ஜம்ரி, தேர்தல் மோசடி என்று கூறப்படுவதை ஒதுக்கித்தள்ளினார். எல்லாம் “சரியாவே” நடந்தது என்றாரவர்.

சில வேளைகளில் நிர்வாக-எதிர்ப்பு எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்து விடுகிறது. அதுதான் சீனர்கள் அதிகம் வசிக்கும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்ட பிஎன் வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணம் என்றவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் அதை (சீனர்களின் வாக்குகள் அந்த அளவுக்கு பக்காத்தான் பக்கம் திரும்பும் என்பதை) எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதுதான் மக்கள் தீர்ப்பு என்பதால் அதை ஏற்கிறோம்”, என்று  பிஎன் வெற்றியைப் பிரகடனப்படுத்தும் செய்தியாளர் கூட்டத்தில் ஜம்ரி கூறினார்.

“மக்களை ஒன்றுபடுத்த வேண்டும்” அதுதான்  பிஎன்-னின் உடனடி பொறுப்பு என்றாரவர்.

TAGS: