‘பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பிஎன்-னை நிராகரித்துள்ளனர்’

voteஉங்கள் கருத்து : “நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது.

பிஎன் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொண்டது

அடையாளம் இல்லாதவன்#19098644: எத்தனை தவறுகள் இருந்தாலும் தேர்தல் முடிந்து விட்டது. மலேசியர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு நாட்டு நிர்மாணத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. அரசியல் போராட்டம் நிற்க வேண்டும். நாட்டை ஒன்றுபடுத்துவதில் நாம் இறங்க வேண்டும்.

தவறுகளும் அத்துமீறல்களும் பெர்க்காசா தீவிரவாதமும் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டும். சமயத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் ‘அல்லாஹ்’ போன்ற விஷயங்களுக்கு அரசியல் சாயம் பூசக் கூடாது. இந்த அரசாங்கம் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 49 விழுக்காட்டை மட்டுமே பெற்றுள்ளது. அதே வேளையில் எதிர்த்தரப்புக்கு 50 விழுக்காடு சென்றுள்ளது.

மொத்தமுள்ள 505 சட்டமன்ற இடங்களில் பக்காத்தான் 230ஐ அதாவது 46 விழுக்காட்டை பிடித்துள்ளது. தீவகற்ப மலேசியாவில் அதற்கு பிஎன்-னைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்துள்ளன. ஆகவே ஆளும் கூட்டணியை தொடர்ந்து அதிகாரத்தில் வைத்திருக்க சபா. சரவாக் முடிவுகளே உதவியுள்ளன.

தில்லுமுல்லுகளும் முடிவுக்கு வரவேண்டும். ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்னும் கோட்பாடு நிலை நிறுத்தப்பட வேண்டும். பினாங்கு மக்கள் பண அரசியலை தெளிவாக நிராகரித்துள்ளனர். அதே போன்று கெடா மக்களும் திறமையில்லாத மந்திரி புசாரையும் அவரது கட்சியையும் நிராகரித்துள்ளனர்.

அந்நியர்கள் வாக்களிக்கும் விவகாரமும் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியல் பிரச்னையும் தீர்க்கப்பட வேண்டும். உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு பிஎன் -னுக்கு வய்ப்பு கிடைத்துள்ளது. 2018 வாக்கில் நாட்டில் அதிகமான இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பர். நகரமயமும் அதிகரித்திருக்கும். அதனால் கோரிக்கைகளும் கூடுதலாக இருக்கும்.

நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான, கிழக்கு மலேசியாவுக்கும் மேற்கு மலேசியாவுக்கும் இடையிலான, நன்கு கல்வி கற்ற, தகவல் அறிந்த மக்களுக்கும் அதிகம் கல்வி கற்காத, அதிகம் தகவல் தெரியாத மக்களுக்கும் இடையிலான தேர்தல் முடிவே இதுவாகும்.

நாட்டில் இரண்டு வகையான சமூகங்கள் இருக்கும் கதை இது. ஒரு சமூகத்தை பிஎன் -னும் இன்னொரு சமூகத்தை பக்காத்தானும் பிரதிநிதிக்கின்றன. மலேசியர் என்ற முறையில் நாம் ஒரு சமூகமாக, ஒரே நாடாக, ஒரே மக்களாக ஒன்றுபட வேண்டிய நேரம் வந்து விட்டது.

தேர்தல் முடிவுகள் வருத்தத்தை அளித்தாலும் நாம் நமது தேர்வுகளைச் செய்துள்ளோம். நாம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும்.

எச்பிலூய்: இப்போது எல்லோருடைய கவனமும் பிரதமர் நஜிப் ரசாக் படிந்துள்ளது. தமக்கு முந்திய பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு ஏற்பட்ட நிலையே அவருக்கும் ஏற்படுமா ?

ஹெர்மிட்: நஜிப் அப்துல்லாவைக் காட்டிலும் மோசமான அடைவு நிலையைப் பெற்றுள்ளார். தமது தோற்றத்தை மேம்படுத்த அவர் 50 பில்லியன் ரிங்கிட் செலவு செய்த போதிலும் பக்காத்தானிடம் மேலும் ஏழு நாடாளுமன்ற இடங்களை இழந்துள்ளார்.

நஜிப் பிரதமர் பதவியைத் துறக்க வேண்டும் அல்லது வரும் அம்னோ பொதுப் பேரவையில் அவர் கவிழ்க்கப்படுவார்.

தெளிந்த நீர்: செலுத்தப்பட்ட வாக்குகளில் 50 விழுக்காட்டுக்கு மேல் பக்காத்தான் பெற்றிருக்குமானால் செல்வாக்கு இல்லாத பிஎன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி இது தான்: நஜிப்பும் அவரது கூட்டாளிகளும் என்ன செய்யப் போகின்றார்கள் ? அவரது ஒரே மலேசியாவை நகரப்புற மக்கள் நிராகரித்து விட்டனர். அவர் எல்லா மலேசியர்களையும் பெரிய மனதுடன் ஒன்று சேர்க்க முயலுவாரா அல்லது அம்னோ பழமைவாதிகளுக்கு அடி பணிவாரா ?

வெறுப்படைந்தவன்: உண்மையில் இது மலேசியாவுக்குச் சோகமான நாள். ஊழலையும் அதிகார அத்துமீறல்களையும் நிராகரிக்கும் முதிர்ச்சியும் விவேகமும் மலேசியர்களுக்கு இல்லை எனத் தோன்றுகிறது.

மூங்கில்: BR1M என்ற ஒரே மலேசியா உதவித் தொகை என்ற இனிப்பான வாக்குறுதிக்கு மயங்கியவர்கள், அம்னோபுத்ராக்கள், அவர்களுடைய வேவகர்கள் ஆகியோரது சட்டைப் பைகளுக்கு பணத்தை கொட்டுவதற்கு எப்போதும் வியர்வை சிந்த உழைக்க வேண்டியிருக்கும்.

உண்மையில் அந்த ஒரே மலேசியா உதவித் தொகை ஜிஎஸ்டி என்ற பொருள், சேவை வரி, மின் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை ஏற்றம், உணவுப் பொருள் விலை அதிகாரிப்பு ஆகியவற்றைச் சமாளிக்கவே போதாது.

மலேசிய மக்கள்: தேர்தல் ஆணையம் கடைசி நிமிட தீய தந்திரங்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால் பக்காத்தான் புத்ராஜெயாவை வென்றிருக்க முடியும். தேர்தல் ஆணையம் நமது ஜனநாயக உரிமைகளை மீண்டும் திருடி விட்டது.

அர்மாகெடோன்: டிஏபி, பிகேஆர், பாஸ் கட்சிகளுக்கு என் அறிவுரை: இருளுக்கான பாதை அகலமானது. ஆனால் நல்லதுக்கான பாதை குறுகலானது. தயவு செய்து எங்கள் வருத்தத்தை நம்பிக்கையாகவும் வலிமையாகவும் மாற்றுங்கள். உண்மையும் நீதியும் நிலைக்கும்.

TAGS: