முறைகேடான தேர்தலுக்கு எதிராக முகநூலில் அணிசேரும் இளைய சமுதாயம்

rip democracyமுறைகேடான முறையில் 13-வது பொதுத் தேர்தல் நடந்துள்ளதாக கூறி மலேசியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் முகநூல் (Facebook) வழி தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.

அவர்கள் பொதுத்தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கும் வண்ணம் முகநூலில் தங்களது சுயவிபர படங்களையும் (Profile Pictures) கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளனர். இதனால் முகநூல் எங்கும் பிஎன் தலைவர் நஜிப்பிற்கான எதிர்வலைகள் கருப்பு நிறங்களாக காட்சியளிக்கின்றன.

13-வது பொதுத் தேர்தலில் நடந்துள்ளதாக கூறப்படும் அனைத்து மோசடி சம்பவங்களையும் அவர்கள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் முகநூலில் பதிவு செய்து தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வங்களா, பாகிஸ்தான், நேபாள், இந்தோனிசியா போன்ற அந்நிய நாட்டவர்கள் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டமை, ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மலேசியர்களிடமும்  கடும் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்டவேண்டிய கடப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையமும் காவல்துறையும், தேசிய முன்னணியின் தேர்தல் மோசடிகளுக்குப் அப்பட்டமான முறையில் உடந்தையாக இருந்ததாக பல முகநூல் பாவனையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கள்ள வாக்கு போடுவதற்காக அந்நிய தொழிலாளிகளுக்கு 4 மணி நேரத்தில் குடியுரிமையுடன் நீல நிற அடையாள அட்டையை வழங்கியுள்ளது தேசிய முன்னணி. ஆனால், இந்நாட்டில் பிறந்து இந்நாட்டிற்காக உழைத்து ஓடாக தேய்ந்துபோன இந்தியர்களுக்கு சிவப்பு நிற அடையாள அட்டை; இதுதான் தேசிய முன்னணி அரசாங்கம் என ஓர் இந்திய ஆடவர் தனது ஆதாங்கத்தை முகநூலில் பதிவுசெய்துள்ளார்.

முகநூலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைகேடான தேர்தலுக்கு எதிரான கறுப்பு நிறத்திலான போராட்டம் சிலருக்கு தேவையில்லாத ஒன்றாக தெரியும்… ஆனால், இந்த நினைப்பு நாளை உங்கள் சந்ததிகளை ஊழல் நிறைந்த சமூகத்தில் உலாவ வழிவகுக்கும் என்பதை இவர்கள் அறிவார்களா? என மற்றொரு ஆடவர் முகநூல் பதிவின் மூலம் வினவியுள்ளார்.

இந்நிலையில், பல இடங்களில் வாக்கு சீட்டு கணக்கெடுப்பு நேரத்தில் மின் சக்தி துண்டிக்கபட்டதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு பல இளைஞர்கள் நஜிப்பின் முகநூல் பக்கத்திலும், TNB முகநூல் பக்கத்திலும் கேள்விக்கனைகளை தொடுத்துள்ளனர். இன்னும் சிலர், தேர்தல் முறைகேடுகள் குறித்து, தங்களுக்கு நீதி கிடைப்பதற்கு உதவுமாறு அமெரிக்க அதிபர் ஓபாமாவை முகநூல் வழியும் கோரிக்கை மனு மூலமாகவும் கேட்டுகொண்டுள்ளனர்.

வாக்கு கணக்கெடுப்பு அறையில் மின் சக்தி துண்டிக்கபட்டது, வாக்கு சீட்டு பெட்டி சட்டத்திற்குப் புறம்பாக இரவு 10 மணிக்கு மேல் கொண்டுவரப்பட்டது,  இது போன்ற அநியாயங்கள் இந்நாட்டில் நடந்திருப்பது  மலேசியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டதாகவே அவர்கள் கருதுகின்றனர்.

முகநூலில் வலுவடைந்துவரும் இளைஞர்களின் இவ்வாறான செயற்பாடுகளானது, தற்கால இளைய சமுதாயம் அரசியல் விழுப்புணர்ச்சி அடைந்ததுடன் புதியதொரு மாற்றதையும் எதிர்பார்த்துள்ளனர் என்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

இதேவேளை, நாட்டின் 13-வது பொதுதேர்தலில் முறைகேடுகள் குறித்தும் வன்முறை சம்பவங்கள் குறித்தும் முறையான மற்றும் தெளிவான விளக்கம் பெறும்வரைக்கும் தேர்தல் முடிவுகளை பெர்சே இயக்கம் ஏற்றுக் கொள்ளாது என்று அதன் தலைவர் அம்பிகா ஶ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும்,தேர்தல் மோசடிகளை ஆட்சேபித்து அடுத்த ஒரு மாத காலத்திற்கு கருப்பு பட்டையை அணியுமாறு அம்பிகா ஶ்ரீநிவாசன் பொதுமக்களை கேட்டுகொண்டார்.

TAGS: