முதலமைச்சர் லிம் குவான் எங், தமது பினாங்கு மாநில அரசாங்கம், ஞாயிற்றுக் கிழமை தேர்தலில் பிஎன் -னுக்கு ஆதரவு அளித்தவர்கள் உட்பட மாநிலத்தில் உள்ள எல்லா குடி மக்களிடமும் நியாயமாக நடந்து கொள்ளும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
பினாங்கு மாநில முதலமைச்சராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்ட குவான் எங், பினாங்கு மக்களுடைய அரசியல் விசுவாசத்தை பண அரசியலினால் வாங்க முடியாது என்பதை நிரூபித்து விட்ட மக்களுக்கு பினாங்கு பக்காத்தான் ராக்யாட் நன்றிக் கடன் பட்டுள்ளதாகவும் சொன்னார்.
“வாக்குகளை வாங்குவதற்காக கடந்த ஐந்து நாட்களில் மட்டுமே தோன்றியவர்களைக் காட்டிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் செய்துள்ளதற்கு பினாங்கு மக்கள் மதிப்பளித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
“சீன வாக்காளர்கள் மீது பழி போடும் பிஎன் இனவாத ஆட்டத்தையும் பிஎன் இழப்புக்கு சீன சமூகத்தைப் பலிகடாவாக ஆக்குவதையும் பக்காத்தான் செய்யாது. அதற்குப் பதில் இனம் சமய, அரசியல் பின்னணி வேறுபாடின்றி அனைத்து பினாங்கு மக்களையும் பக்காத்தான் நியாயமாக நடத்தும்.”
எல்லா பக்காத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை ஆண்டுதோறும் அறிவிப்பர் என்றும் அதனை கணக்காயர் நிறுவனம் ஒன்று உறுதி செய்யும் என்றும் குவான் எங் சொன்னார்.
ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த தேர்தலில் மொத்தமுள்ள 40 பினாங்கு சட்டமன்றத் தொகுதிகளில் 30ஐ பக்காத்தான் ராக்யாட் வென்றது. அந்த எண்ணிக்கை 2008 தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஒன்று அதிகமாகும்.
மாநில அளவில் செலுத்தப்பட்ட வாக்குகளில் அதற்கு 66 விழுக்காடு கிடைத்துள்ளது. 2008ல் அந்த விகிதம் 63 ஆக இருந்தது.
மக்கள் அவர்தம் கடமையை, உரிமையை சிறப்பாக செய்துள்ளனர்! மக்களின் பிரதிநிதிகள் நீங்கள் உங்கள் கடமையை நேர்மையாக செய்வீர்கள் என்று நாடு எதிர்பார்கிறது. உள்பூசல், கட்சிக்குள் சதிவேலை, அநாகரீக அறிக்கைகள், ஆணவ பேச்சு , கர்வம் போன்ற சாக்கடையில் புரளாமல் மக்களுக்கு தேவையான நற்பணியில் ஈடுபடுங்கள். இது மக்கள் ஆட்சி , மக்களுக்காக , மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்பதை உறுதி செய்யுங்கள் , வாழ்த்துக்கள் !!
மீண்டும் நிருபணம் !உண்மை வெல்லும்