இசி: பொதுத் தேர்தல் முடிவுகளை ஆட்சேபிக்க சாலை ஆர்ப்பாட்டம் வேண்டாம்

protest13வது பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து மகிழ்ச்சி அடையாத வேட்பாளர்கள் அல்லது மலேசியக் குடிமக்கள்  தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவிக்க சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது. மாறாக உயர் நீதிமன்றத்தில்  மனுக்களை சமர்பிப்பதின் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார்.

“பொதுத் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அது சட்டபூர்வமான வழிகளில் செய்யப்பட வேண்டும்.”

“தாங்கள் பொதுத் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதாக உலகிற்குச் சொல்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும்  சாலைகளுக்குச் செல்ல வேண்டாம்,” என அவர் சொன்னார்.

பெர்னாமா தொலைக்காட்சி தயாரித்த ‘ஹலோ மலேசியா’ நிகழ்ச்சிக்கு வான் அகமட் பேட்டி அளித்தார். அதனை ஆஸ்ட்ரோ நேற்றிரவு ஒளிபரப்பியது.protest1

தேர்தல் முடிவுகளை இசி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவித்த 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் தேர்தல்  நடைமுறைகள் மீது வேட்பாளர்கள் தங்கள் ஆட்சேபத்தைச் சமர்பிக்க முடியும் என வான் அகமட் தெரிவித்தார்.

13வது தேர்தல் முடிவுகளை இன்னும் இரண்டு வாரத்தில் இசி அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது.

வேட்பாளர்கள் தங்கள் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யலாம். ஆறு மாதங்களுக்குள் அந்த மனு தீர்க்கப்பட வேண்டும்.

“உயர் நீதிமன்ற முடிவில் அவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் அவர்கள் கூட்டரசு நீதிமன்றத்துக்கும் முறையீடு செய்யலாம்,” என்றும் அவர் சொன்னார்.

ஊழல், தவறான போக்கு, தேர்தல் சட்டங்கள், விதிமுறைகள் ஆகியவை பின்பற்றப்படாதது ஆகிய காரணங்களுக்காக தேர்தல் மனு சமர்பிக்கப்பட முடியும் என்றும் வான் அகமட் தெரிவித்தார்.

பெர்னாமா

TAGS: