ஐபிஎப் தேர்தல் விளம்பரம், நம்மை அழ வைக்கிறது!

news_IPFவிடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின்  மகன் பாலச்சந்திரன் படத்துடன் “ இந்நிலை யாருக்கும் வேண்டாம்” என்ற தலைப்புடன் ஐபிஎப் கட்சி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் பலரின் மனதை நோகடித்துள்ளது. இந்த விளம்பரத்தை மு.வீ. மதியழகன் செய்துள்ளதாகத் தெரிகிறது.

அந்த நிலை யாருக்கும் வரக் கூடாதுதான். ஆனால் இந்த இனவாத தேசிய முன்னணி அரசு என்ன செய்தது? இந்த நிலை இனி யாருக்கும் வரக்கூடாது என்ற நம்முடைய எல்லா கோரிக்கைகளையும் ஊர்வலங்களையும் கபடத் தனத்தோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐநா மனித உரிமை மன்றத்தில் வாக்களிக்காமல் நடுநிலை காத்து நம்மை தலைகுனிய வைத்தது.

இதைவிட நம் தமிழர்களுக்கு இவ்வினவாத அரசு வேறு என்ன துரோகம் செய்துவிட முடியும்? எந்த நிலையில் இந்த அரசை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்கள்? மனிதப் படுகொலைகளை, திட்டமிட்ட இனப்படுகொலையை உள்நாட்டு பிரச்சனை என வரையறுத்த இந்த தேசிய முன்னணி அரசு நாளைக்கு இதே நிலைக்கு நம்மை இட்டுச் செல்லாது என்பதை எப்படி நம்புவது?

இவ்வாண்டு இறுதியில் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த்-பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு நமது நாட்டு பிரதமர் கலந்துக் கொள்ளக் கூடாது என அறிக்கை வழங்கி பல நாள்களாகி விட்டது. இன்றுவரை அதே கபட மௌனம்தான் தொடர்கிறது.

உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவே இல்லையா? நீங்கள் ஈழ ஆதரவாளர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அதில் எவ்வளவு நாடகத்தனம் இருக்கிறது என்பது இப்போது தெளிவாக தெரிந்து விட்டது. எதனோடு எதைக் கொண்டுவந்து முடிச்சு போடுகிறீர்கள்? ஈழத் தமிழர்கள் பிரதமருக்கு நன்றி சொல்லும்படி உங்களிடம் சொல்லிவிட்டார்களா!

சலுகைகளுக்காகவும் பிச்சைப் பொருள்களுக்காகவும் பணத்திற்காகவும் மனசாட்சியை அடகு வைக்கவும் ; சில வேளைகளில் விற்றுவிடவும் துணியும் தன்மையிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டிய தலைவர்களே சோரம் போனால் என்னதான் மிஞ்சும்?

1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஏற்பட்ட எதிர்ப்பலைகளின் காரணமாக, மஇகாவிலிருந்து தூக்கியெறியப்பட்ட டத்தோ பண்டிதன் மலேசிய இந்தியர் முன்னேற்றக் கட்சியைத் (ஐபிஎப்) தொடங்கி ஒடுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைக்காக போராடினார்.

அதை குழிதோண்டி புதைத்துவிட்டு சில பிச்சை சலுகைகளுக்காக விளம்பரம் செய்யும் ஐபிஎப் தலைவர் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் மு.வீ.மதியழகனை கண்டு நமது கண்களில்  கண்ணீர்தான் வருகிறது.

TAGS: