அன்வார் தொடர்ந்து போராட வேண்டும் – கா. ஆறுமுகம்

anwar_newதேர்தல் பற்றி சுவராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.

1. தேர்தல் முடிவுகள் பற்றி பொதுவான கருத்து என்ன?

பிரதமர் நஜிப்பின் அள்ளிக் கொடுக்கும் திட்டங்களும், பணப்பட்டுவாடாவும், ஒருதலைப்பட்ச ஊடகங்களும், தேர்தல் ஆணையத்தின் மலட்டுத்தனமும் ஒரு வகையில் மக்களின் தேர்வாக அமைய வேண்டிய இந்த தேர்தலை மக்களிடம் இருந்து களவாடி விட்டதாக குற்றம் சாட்டலாம்.  இருப்பினும், மக்கள் கூட்டணி வெற்றி பெற்ற மாநிலங்களில் உள்ள மக்களின் விழிப்புணர்வாலும், அரசியல் ஈடுபாட்டாலும் அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது  எனலாம்.

2. சிலாங்கூர், பினாங்கு, கிளந்தான் ஆகிய மாநிலங்களில் மக்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக தேர்வு பெற்றுள்ளனரே?

ஆமாம், அது உண்மைதான். மக்களிடம் இருந்த விழிப்புணர்வும், போராட்ட உணர்வும்தான்  அதற்கு காரணம். கடந்த 5 ஆண்டுகளாக மாற்று அரசாங்கத்தின் ஆட்சியில் இருந்ததால் அவர்களால் அந்த வேறுபாட்டை உணர முடிந்தது; ஒப்பீடு செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் தேசிய முன்னணியால் இதைவிட சிறந்த ஆட்சியை வழங்க இயலாது என்ற நிலைக்கு வந்து விட்டனர். ஆனால், கெடா அரசின் செயலாக்கத்தில் திருப்தியற்ற மக்கள் அதை மீண்டும் தேசிய முன்னணியிடம் கொடுத்து விட்டனர்.

மற்ற மாநிலங்களுக்கு இப்படியான ஒப்பீடு செய்யும் வாய்ப்பு இல்லை. இருப்பினும் பேரா மாநிலத்தில்  மிகக் குறுகிய பெரும்பான்மையில்தான்  தேசிய முன்னணியால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. நெகிரி செம்பிலான, மலாக்கா, ஜொகூர், பகாங், திரெங்கானு போன்ற மாநிலங்களில் அம்னோவின் ஆதிக்கம் ஆட்டம் கண்டு வருகிறது.

anwar43. சீனர்கள் ஒட்டு மொத்தமாக தேசிய முன்னணியைப் புறக்கணித்ததின் பின்னணி என்ன?

மலாய் இனவாதத்தின் கீழ் அவதிப்படும் மலேசியர்கள் அனைவரும் தேசிய முன்னணியைப் புறக்கணித்திருக்க வேண்டும். மலேசியா நமது நாடு. இதை நாம் ஏன் மறுக்க வேண்டும்.

மகாதீர் சொல்வதையும் நஜிப் சொல்வதையும் கேட்டு எவ்வளவு காலம்தான் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக வாழ்வது. பயந்து பயந்து வாழ்வதுதான் நாம் நமது குழந்தைகளுக்குக்  கற்று கொடுக்கும் பாடமா?

சுமார் 50 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இனம் நமது நாட்டை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்டு நம்மை மிரட்டி மிரட்டி அடிமைப்படுத்துகிறது; நாட்டை சூறையாடுகிறது.

மக்கள் எவ்வளவு மோசமாக வாழ்கிறார்கள் என்று நேரில் சென்று பாருங்கள். குத்தகை தொழிலாளர்களாக மாதம் ரிம 500 முதல் ரிம 750 வரை மட்டுமே வருமானம் பெறும் மக்களுக்கு ஆண்டுக்கு ரிம 500 அல்லது ரிம 1,000 கொடுத்தால் அது நல்ல ஆட்சியா?

அரசாங்கத்தைக்  கையில் வைத்துக்கொண்டு இது எங்கள் நாடு என்று மிரட்டுவதை தட்டி கேட்க மாசீசாவும் மஇகாவும் முன்வராது. இவர்கள் எரியும் வீட்டில் கொள்ளையடிக்கும் தன்மை கொண்டவர்கள்.

arumugam_suaram4. அதன் தாக்கம் பற்றி கூறுங்கள்?

தாக்கத்தைப் பற்றி அதிக கவலை கொள்ளக்கூடாது. காரணம் அது பயத்தை உற்பத்தி செய்யும். நீதி நேர்மை நியாயம் என்பதுதான் நமது போராட்டம். நமக்கு ஓட்டுரிமை உண்டு; அதை பயன்படுத்துகிறோம். ஓட்டு போட்ட பிறகு ஏன் எனக்கு போடவில்லை என புலம்புவது கேவலமாக உள்ளது.

பணம் கொடுத்து, இலஞ்சம் கொடுத்து, சாப்பாடு போட்டும் மக்கள் எனக்கு ஓட்டு போடவில்லையே என புலம்புவதை விட்டு விட்டு மக்கள் கேட்கும் நாட்டுரிமையை திருப்பித் தர முன்வர வேண்டும்.

சீனர் சுனாமி என்றும், ‘சீனா, உனக்கு இன்னும் என்னா வேணும்?’ என்றும் சாடுவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இது போன்ற புளித்துப்போன வசனங்கள் போரடித்து விட்டது. மாகாதீருக்கு வயதாகி விட்டதால் அவருக்கு  மாற்றம் கோரும் மக்களின் மனதை புரியும் தன்மை மழுங்கிவிட்டது.

வலதுசாரி மலாய்க்காரர்கள், என்ன செய்வார்கள்? பயத்தை உற்பத்தி செய்வார்கள். தங்களது தனித்தன்மை போய்விடும் என்று போராடுவார்கள். அதற்கு மாசீசவும் மஇகாவும் ஜால்ரா போடும். மீண்டும் மலாய்க்காரர்கள் ஒன்றுபட மலாய் இன தேசியவாதிகள் சப்பு கொட்டுவார்கள். இந்த இத்யாதிகள் இனியும் செல்லாது என்பதை மட்டும் உணர மறுப்பார்கள்.

hindraf5. வேதமூர்த்தி குழுவினர் நஜிப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தம் என்னவாகும்?

இதைப்பற்றி முன்பே கூறியுள்ளேன். அவர்களும் மஇகா போல் வாலாட்ட பழக வேண்டும். சமூகத்தின் நன்மைக்காக வாலாட்டுவதும், பிச்சை எடுப்பதும் தவறில்லை என்று ஒரு வியாக்கியானமும் கொடுக்கலாம்.

6. உதயகுமாரின் தோல்வி பற்றி..?

சொன்னதைச் செய்தார். அவருக்கு தோல்விகள் சகஜம். அவரின் போராடும் குணம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தியர்களை உரிமை அடிப்படையில் ஒருங்கிணைக்க எல்லா தகுதிகளும் கொண்டவர். ஆனால் இணைந்து செயலாற்ற கற்றுக் கொள்ள வேண்டும். அவர் தனிமரம்; ஆனால் ஆழமான வேருள்ள மரம்.

7. அன்வாரின் எதிர்காலம்?

அம்னோவில் கற்ற பாடங்கள் அவருக்கு மிகுந்த ஆற்றலைக் கொடுத்துள்ளது. நமது நாட்டின் மீட்சிக்கு அவர் உண்டாக்கிய போராட்டம் மிகுந்த நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. இரு வகையான கட்சிகளும் இந்தியர்களை முக்கியமாக கருதுவதற்கு அன்வார்தான் காரணம். அவர் தொடர்ந்து போராட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

TAGS: