மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

PR-Rally-kj1இன்று (08.05.2013) கிளானா ஜெயாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மக்கள் பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். இரவு மணி 10.39 அளவில் பேரணியில் உரையாற்றிய மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களாகவோ, சீனர்களாகவோ, இந்தியர்களாகவோ, கடஸான்களாகவோ, டயாக்களாகவோ இருக்கலாம், விரும்புவது சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனத்தின் வழி அன்வார் இப்ராகிம் நேற்று உத்துசான் மலேசியா எழுப்பியிருந்த சினமூட்டும் “சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்” தலைப்புச் செய்தியை கண்டனம் செய்தார்.

ஒவ்வொரு மலேசியரும், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடின்றி, அவர்களது உரிமையைக் கோருகின்றனர். அவர்கள் பாரிசானின் வீழ்ச்சியைக் காண விரும்புகின்றனர் என்று அன்வார் கூறினார்.

அரங்கத்தில் குழுமியிருந்த 80,000 க்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முட்டியை உயர்த்தி ஆரவாரத்துடன் முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

PR-Rally-kj2கிளானாஜெயா அரங்கத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் வாகன நெரிச்சல் காணப்பட்டது. ஆனால், அந்த நெரிசலில் அகப்பட்டுக் கொண்ட மக்கள் எரிச்சலடையாமல் மகிழ்ச்சியாக காணப்பட்டதோடு தங்களுடைய வாகனங்களின் கண்ணாடியை இறக்கி விட்டு, ஒலி எழுப்பி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அரங்கத்தை நோக்கி நடந்து சென்றனர்.

பேரணி நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கி விட்ட போதிலும் இரவு 10 மணி அளவிலும் மக்கள் அரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இரவு மணி 10.05 க்கு அன்வார் இப்ராகிம் அரங்கத்திற்குள் வந்தார். அவரை அங்கிருந்த மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் “Kamai anak Malaysia”  என்றும் முழக்கமிட்டனர்.

PR-Rally-kj3டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஒரு மோட்டார் சைக்களில் இன்னொருவருடன் வந்து சேர்ந்தார். வானக நெரிசலை சமாளிக்க அவர் மேற்கொண்ட வழி அதுவாகும்.

பேரணியில் பங்கேற்ற மக்களில் பலர் கருப்பு உடை அணிந்திருந்தனர். இன்னும் பலர் “Ini Kalilah” டி-சட்டை அணிந்திருந்தனர்.

இரவு மணி 9.00 க்கு உரையாற்றிய பிகேஆர் வியூக இயக்குனர் ரஃபிஸி ரமலி இனவாத விளையாட்டு விளையாட வேண்டாம் என்று உத்துசான் மலேசியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அது மலேசியர்களின் கடும் கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றாரவர்.

“நான் ஒரு மலாய்க்காரர், ஆனால் நான் பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிக்கிறேன்”, என்று அவர் முழங்கினார்.

அங்கிருந்த மக்கள் “Najib, tipu”, “ubah” என்று குரல் எழுப்பி விசிலடித்தனர்.

அங்கு குழுமியிருந்தவர்களில் பலர் பெர்சே இயக்கத்தைப் பிரதிபலிக்கும் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டு வந்திருந்தனர்.

TAGS: