பொதுத் தேர்தல் முடிந்து நான்கு நாளாகி விட்டது. புதிய சிலாங்கூர் மந்திரி புசார் பதவி உறுதி மொழி எடுத்துக் கொள்வதற்கான அறிகுறிகள் இன்னும் தென்படவில்லை.
பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மற்ற இரு மாநிலங்களான பினாங்கிலும் கிளந்தானிலும் முறையே புதிய முதலமைச்சரும் மந்திரி புசாரும் பதவி ஏற்றுக் கொண்டு விட்டனர்.
சிலாங்கூரில் தாமதம் ஏற்படுவதால் பக்காத்தான் ராக்யாட் நடப்பு மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமை மாற்ற எண்ணுகிறதோ என்ற ஊகத்தை ஏற்படுத்தி விட்டது.
டிஏபி-யும் பாஸ் கட்சியும் தலா 15 இடங்களை வென்று பிகேஆர் 14 இடங்களை மட்டுமே வென்றுள்ளது அந்த ஊகத்திற்கான காரணமாகும்.
அந்த மந்திரி புசார் பதவி பாஸ் கட்சிக்குக் கிடைக்க வேண்டும் என அந்தக் கட்சியின் சில அடித்தட்டு
உறுப்பினர்கள் விரும்பினாலும் அதன் உயர் நிலை தலைமைத்துவம் அவ்வாறு எண்ணவில்லை.
காலித் இப்ராஹிம் இரண்டாவது தவணைக் காலத்துக்கு மந்திரி புசாராக இருக்க வேண்டும் என பாஸ்
தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
மந்திரி புசாராக சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி மந்திரி புசாராக வேண்டும் என பிகேஆர்
உட்பிரிவு ஒன்று விரும்பினாலும் இரண்டு பக்காத்தான் தோழமைக் கட்சிகள் வலுவான ஆதரவு
தெரிவித்துள்ளதால் காலித் மந்திரி புசாராக பெயர் குறிப்பிடப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
அஸ்மினுடன் ஒப்பிடுகையில் காலித் நீக்குப்போக்கு இல்லாமல் பணியாற்றுவதாகக் குறைகூறப்பட்டாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் அரசாங்கம் சிறந்த முறையில் செயல்பட்டுள்ளதற்கான பெருமை காலித்திற்குக் கிடைத்துள்ளது.
என்ன விலை கொடுத்தாவது சிலாங்கூரைத் தக்க வைத்துக் கொள்ள பிஎன் தீவிரமாக முயன்றதால் கடுமையான போட்டி நிலவிய போதிலும் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவரது
தலைமைத்துவத்தின் கீழ் பக்காத்தானுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சி மன்றம் திருத்தி அமைக்கப்படலாம்
ஆட்சிமன்ற உறுப்பினர்களை முடிவு செய்யும் விவாதங்களில் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் இப்போது ஈடுபட்டுள்ளதால் மந்திரி புசாரை பெயர் குறிப்பிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சட்டமன்ற சபாநாயகர், மூத்த ஆட்சி மன்ற உறுப்பினர்கள், ஆட்சி மன்ற உறுப்பினர் ஒதுக்கீடு ஆகிய
விஷயங்களும் விவாதிக்கப்படுகின்றன.
முன்பு இருந்த ஆட்சி மன்றத்தில் பிகேஆர்-டிஏபி-பாஸ் ஆகியவற்றுக்கு முறையே 4-3-3 என ஒதுக்கீடு
வழங்கப்பட்டிருந்தது.
பாஸ் இப்போது பிகேஆர் கட்சியைக் காட்டிலும் அதிக இடங்களை வென்றுள்ளதால் பிகேஆர் ஒர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை பாஸ் கட்சிக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். அல்லது இப்போது டிஏபி-யின் தெரெசா கோக் வசமுள்ள மூத்த ஆட்சிமன்ற உறுப்பினர் பதவி பாஸ் கட்சிக்குக் கிடைக்க அனுமதிக்க வேண்டும்.
காலித் தொடர்ந்து மந்திரி புசாராக இருப்பார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் அவர் புதிய ஆட்சிமன்ற உறுப்பினர்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
ஹலிமா அலி, இஸ்காண்டார் அப்துல் சமாட் உட்பட தனது முன்னாள் மாநிலத் தலைவர் ஹசான்
அலி நியமித்த எல்லா ஆட்சி மன்ற உறுப்பினர்களையும் பாஸ் கட்சி கைவிடக் கூடும் என சில வட்டாரங்கள் தெரிவித்தன.
என்றாலும் ஹசான் அலி நீக்கப்பட்ட பின்னர் ஆட்சிமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அகமட் யூனுஸ் தொடர்ந்து இருப்பார் எனத் தெரிகின்றது.
பிகேஆர் கட்சியைப் பொறுத்த வரையில் அஸ்மின் மந்திரி புசார் பதவிக்குக் குறி வைக்கா விட்டாலும் தமது ஆட்கள் ஆட்சிமன்றத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
சேவியரும் எலிசபத் வோங்கும் கழற்றி விடப்படலாம் ?
நடப்பு ஆட்சிமன்ற உறுப்பினர்களான சேவியர் ஜெயகுமாரையும் எலிசபத் வோங்கையும் அகற்றி விட்டு அவர்களுக்குப் பதில் மலாய் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக அமிருதின் ஷாரி-யையும் நிக் நஸாமி நிக் அகமட்டையும் நியமிக்க அஸ்மின் விரும்பக் கூடும்.
அந்த இருவருடன் நல்ல அடைவு நிலையைப் பெறவில்லை எனக் கருதப்படும் நடப்பு பிகேஆர் ஆட்சி மன்ற உறுப்பினர் யாக்கோப் சபாரி கைவிடப்படும் வேளையில் ரோட்ஸியா இஸ்மாயில் தொடர்ந்து இருக்க அனுமதிக்கப்படலாம்.
இதனிடையே மாநிலச் சட்டமன்ற இடங்களிலிருந்து தெரெசா கோக்கும் ரோனி லியூவும் அகன்று விட்டதால் டிஏபி ஆட்சிமன்ற உறுப்பினர்கள் பட்டியலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிலாங்கூர் டிஏபி, கட்சியில் புரட்சிக்காரரான தெங் சாங் கிம்-மை தொடர்ந்து சபாநாயகராக வைத்திருப்பதோடு இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டை நிரப்புவதற்கு முதன் முறையாக சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள கணபதி ராவை தேர்வு செய்யக் கூடும்.
இன்னொரு ஆட்சிமன்ற உறுப்பினரான இயான் யோங் ஹியான் வா தொடர்ந்து வைத்திருக்கப்படலாம். ஆகவே எஞ்சியுள்ள ஒர் இடம் லாவ் வெங் சான் அல்லது லீ கீ ஹியோங் அல்லது தெங்-குடன் சமரசம் செய்து கொள்ளும் வகையில் அவரது தரப்பைச் சார்ந்த இங் ஸ்வீ லிம்-க்கு கொடுக்கப்படலாம்.
பக்காத்தான் ராக்யாட் வேட்பாளர் பட்டியலை அங்கீகாரத்துக்காக சிலாங்கூர் சுல்தானுக்கு சமர்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அடுத்த சில நாட்களில் அது செய்யப்படும் எனத் தெரிகிறது.
காலித் இப்ராஹிம் ஒரு சிறந்த முதல்வர் என்பது நாடறிந்த உண்மை, அவரே தொடர்ந்து முதல்வராக வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்.