கிட் சியாங் பிஎன்னில் சேரும் ஆலோசனையை ‘ஆராயத் தயாராக இல்லை’

1lim11டிஏபி பெருந் தலைவர், லிம் கிட் சியாங், புதிய அரசாங்கத்தில் டிஏபி-இன் பங்காற்றுவது குறித்து பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் கட்சி அவை பற்றி விவாதிக்கவில்லை என்றும் தம்மைப் பொறுத்தவரை அப்பரிந்துரையை ‘எண்ணிப் பார்க்கத் தயாராக இல்லை’ என்றும் கூறியுள்ளார்.

“எந்தவொரு பரிந்துரையையும் நான் பரிசீலிக்க நினைக்கவில்லை”, என்று டிஏபி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின், சீன சமூகத்தின் நலன் கருதி டிஏபி பிஎன்னில் சேர வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது லிம் இவ்வாறு கூறினார்.

1lim1ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகத்தின் தலைமை செயல் அதிகாரி மைக்கல் இயோவும், இதேபோன்றதொரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அவர் கூட்டணி அரசாங்கத்தை மேலும் விரிவுபடுத்தி டிஏபி, பிகேஆர், பாஸ் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மே 5 தேர்தலில் நிலவிய கடுமையான போட்டிக்குப் பின்னர் நாட்டில் இணக்கத்தை உண்டுபண்ண இவ்வாறு செய்வது அவசியம் என்றாரவர்.

1 lim2பிஎன் வெற்றிபெற்ற அத்தேர்தலில் பல மோசடிகள் நடந்திருப்பதாகக் குறைகூறப்பட்டுள்ளது. அதற்குக் கண்டனம் தெரிவிப்பதற்காக பக்காத்தான் ரக்யாட் நேற்றிரவு ஏற்பாடு செய்த ஒரு பேரணியில் சுமார் 120,000 பேர் கலந்துகொண்டனர்.

ஒரு கேள்விக்குப் பதிலளித்த லிம், பக்காத்தான் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக முறையீடுகள் செய்யும் அதே வேளையில் நாடு முழுக்க பேரணிகளையும் நடத்தும் என்றார்.

“தேவையான இடங்களில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக முறையீடு செய்வோம். ஆனால், மக்களுக்குத் தகவல் தெரிவிக்க பேரணிகள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும்”, என்றார்.

தேர்தல் முடிவுகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 21 நாள்களுக்குள் தேர்தல் முறையீடுகளைச் செய்ய வேண்டும்.

நேற்றிரவு கிளானா ஜெயா பேரணியில் 28 பேச்சாளர்களின் உரைமீது  விசாரணை மேற்கொள்ளும் விசயத்தில் போலீசார் “திறமையாக” செயல்பட்டிருப்பதாக அவர் பாராட்டினார்.

ஆனால், அம்னோ தொடர்புகொண்ட அல்லது அம்னோவை ஆதரிக்கும் பெர்காசா போன்ற அமைப்புகள் தேச நிந்தனை கருத்துகளைச் செல்லும்போது மட்டும் இந்த “அதி அற்புத திறமை” செயல்படாமலிருப்பதன் மர்மம்தான் தமக்குப் புரியவில்லை என்றார்.

பேரணிகள் தேவைதானா என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின்  அலி டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருப்பது பற்றியும் லிம்மிடம் வினவப்பட்டது.

“அதை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் கருத்துரைப்பதற்கில்லை”, என்றார்.