13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ‘சீனர் சுனாமி’ என்று வருணித்தும் உத்துசான் மலேசியா வெளியிடும் ‘மறைமுகமான இனவாத கருத்துக்களை’ தற்காத்தும் பேசியுள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை 25 அரசு சாரா அமைப்புக்களின் கூட்டமைப்பு ஒன்று சாடியுள்ளது.
உத்துசான் மலேசியாவும் மற்ற தரப்புக்களும் வெளியிட்டுள்ள நஜிப்பின் அறிக்கை மலேசிய சீனர்களுக்கு எதிராக மலாய் சமூகத்தின் பகை உணர்வைத் தூண்டுகிறது என Gabungan Bertindak Malaysia (GBM) என்ற அந்த கூட்டமைப்பு தெரிவித்தது.
பிரதமர் பதவியையும் அம்னோ தலைவர் பதவியையும் வகிக்கும் ஒருவர் அது போன்ற ‘இனவாத’
கருத்துக்களைச் சொல்வது பொருத்தமானது அல்ல என அது கூறியது.
“மகத்தான இந்த நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் எடுத்துக்காட்டாக பிரதமர் திகழ வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். நமது நாட்டை பாதித்துள்ள பிஎன் அரசியல் ஆளுமையின் தோல்வியை மறைப்பதற்கு இனவாதக் கருத்துக்களை வெளியிடுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.”
“தேர்தலுக்குப் பிந்திய அவரது இனவாத உணர்வு அவரது ஒரே மலேசியா கோட்பாடு குறித்து ஏற்பட்டிருக்கக் கூடிய புகழை மங்கச் செய்து விட்டது,” என GMB இன்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நஜிப் சொன்ன கருத்துக்கு நேர்மாறாக சபாவில் கடாஸான் மக்கள் பிஎன்-னுக்கு எதிராக
வாக்களித்துள்ளதையும் சீனர் பெரும்பான்மையைக் கொண்ட சிகாமட் தொகுதியில் பிஎன் வேட்பாளரான மலேசிய இந்தியர் ஒருவர் பிகேஆர் கட்சியின் சுவா ஜுய் மெங்-கை தோற்கடித்துள்ளதையும் அது சுட்டிக் காட்டியது.
அந்தக் கூட்டமைப்பில் சுவாராம், நியாட் எனப்படும் தேசிய இந்தியர் உரிமை நடவடிக்கை குழு, கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபம், Anak Muda Sarawak, இஸ்லாமிய எழுச்சி முன்னணி, MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, சீக்கிய இந்து, தாவோ ஆலோசனை போன்ற பல அமைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.