இந்தியர்களின் 60 விழுக்காடு வாக்குகள் பக்காத்தானுக்கு கிடைத்தது, சேவியர்

xavier jayakumar pkrஇந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் இந்தியர்களின் ஓட்டு 60 விழுக்காடு பாரிசானுக்கு கிடைத்தாகக் கூறி,  சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்  டாக்டர் சுப்ரமணியம்  இந்தியர்களை  அவமதிக்கக் கூடாது என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். இந்திய சமுதாயத்தின் வாக்குகள் பெரும்பகுதி  பாரிசானுக்கு  கிடைத்திருந்தால்  பாரிசானுக்கு தேசிய அளவிலும், சிலாங்கூர் மாநிலத்திலும்கூட பெரிய  வெற்றி கிடைத்திருக்கும்.

இன்று ம.இ.காவின் தலைவரைப் பொதுத் தேர்தல்  தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகச் சொல்லிப் பலர்  அறிக்கை விட்டுள்ள வேளையில் டாக்டர் சுப்ரமணியம்  இந்தியர்களின் வாக்கு 60 விழுக்காடு பாரிசானுக்கு கிடைத்திருப்பதாகக் கூறுவதை  அவர் சொந்தக் கட்சிக்காரர்களே ஏற்க மாட்டார்கள்.

கடந்த13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் வரை ஒரே மலேசியா என்று கூப்பாடு போட்ட பிரதமர்  நஜிப், தேர்தல் நேரத்தில் ஷா ஆலாம் தொகுதிக்கு சுல்கிப்ளி நோர்டினை  வேட்பாளராக அறிவித்தது இந்திய, சீன இனத்தவர்களை ஏளனப்படுத்துவதாக இருந்தது. இந்தியர்களைப் பாரிசான் துச்சமாக எண்ணி அவமதித்ததைக் கண்டு வெகுண்டெழுந்த இந்தியர்கள்  அவர்களின் தீர்ப்பை அளித்து விட்டனர். இனி வரும் காலங்களில் பாரிசான்  அந்தத் தவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று சேவியர் கூறினார்.

மேலும், மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் வாழும் இம்மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்ற துடித்த பாரிசான், அதன் வசம் இருந்த  இடத்தையும் இழந்தற்கு, பெரும்பான்மையான இந்தியர்களின் ஆதரவை அக்கூட்டணி இழந்ததே காரணம் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய  வாக்காளர்களில் 60 விழுக்காட்டினர் பாரிசானுக்கு வாக்களித்ததாக டாக்டர் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளது வடிகட்டின  வேடிக்கையாகும் என்றார் சேவியர்.

அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால், இந்தியர்களை  அவமதித்தவரை நாம் பொருட்படுத்தவில்லை என்பதாகும். மேலும் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட  வாக்குறுதிகள் பல  பிரதமரின் தனிப்பட்ட வாக்குறுதியாக  இருந்து வருவதால் அதனைப்  பிரதமருக்குப் பின் வரும் எவரும் நிறைவேற்றுவாரா என்ற சந்தேகமும் எழுந்திருந்தது.

அதே வேளையில் இத்தேர்தலில் ஒன்றுபட்ட  ஒரு மலேசியாவின் வழி எல்லா மக்களின் மேன்மைக்கான பல திட்டங்களைப் பக்காத்தான் மக்கள் முன் வைத்தது. ஒன்று பட்ட ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இனவாத அரசியல் கட்சிகளால்  ஒருபோதும் முடியாது என்பதனைக் கடந்த 56 ஆண்டுகால ஆட்சி நமக்கு உணர்த்தியிருக்கிறது. ஆகையால், பல இன  மலேசியர்களை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளும்  அரசியல் இயக்கங்களின் கூட்டணியான பக்காத்தான் நம் சமுதாயத்தின் உயர்வுக்கு மிக முக்கியமான திட்டங்களை வழங்கியது, இலவச உயர்கல்வி, தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு மானியம் மற்றும் 100 நாட்களில் இந்தியர்களின் அடையாளப்பத்திர விவகாரத்திற்குத்  தீர்வு என்பதும் அதில் அடங்கும்என்று சேவியர் விவரித்தார்.

அதே வேளையில், நாட்டின் ஊழல் தர்பார் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. அதுவே மக்கள் எதிர்த்து  ஓட்டுப் போடக் காரணமாகவும் இருந்தது என்பதனை மறக்க கூடாது. இதில்  இனவாதமில்லை. மாறாக அநீதியை எதிர்க்க மக்கள் அவர்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்தியுள்ளனர்  என்பதனைப் மறைத்து, தங்களின்   தவறான தலைமைத்துவத்திற்கு கிடைத்த அடியை மறைக்க அதற்கு மீண்டும் இன வர்ணம் பூசக்கூடாது. தவறானவர்களிடம்  அதிகாரமிருந்தால் அதனால் ஏற்படும் இழப்பை மக்கள் உணரத்தொடங்கியதின் பலன், மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்துள்ளனர் என்பதனை  அனைத்து மலேசியர்களும்  கவனத்தில் கொள்ள வேண்டும்  என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

TAGS: