பாராட்டுக் கூட்டம் காலிட்-ஆதரவு கூட்டமாக மாறியது

1khalidசிலாங்கூரைத் தக்கவைத்துகொண்டதைப் பாராட்டுவதற்காக நேற்றிரவு பக்காத்தான் ரக்யாட் ஏற்பாடு செய்த கூட்டம், காலிட் இப்ராகிம் மீண்டும் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமாக மாறியது.

சிலாங்கூர் பாஸ் தலைவர் டாக்டர் அப்துல் ரனி ஒஸ்மான், பிகேஆர் செனட்டர் போன்றோர் முடிவெடுக்கும் பொறுப்பைப் பக்காத்தான் ரக்யாட்டிடம் விட்டு விடுங்கள் என்று கேட்டுக்கொண்டாலும் மற்றவர்கள் அவர்களின் விருப்பத்தைத் தெள்ளத் தெளிவாகக் கூட்டத்தில் வெளிப்படுத்தினார்கள்.

1 khalid samadசிலாங்கூர் பாஸ் துணைத் தலைவர் காலிட் சமட்(இடம்), மாநிலச் சட்டமன்றத்தில் டிஏபி பிகேஆர் ஆகியவற்றை விட பாஸ் கூடுதல் இடங்களைப் பெற்றிருந்தாலும் அது மந்திரி புசார் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றார்.

அப்பதவி வெற்றிபெற்றவர் எடுத்துக்கொள்ளும் ஒரு பரிசல்ல, அதைப் பொறுப்பான ஒரு பதவியாக பாஸ் கருதுகிறது.

“செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது, அவர்களுக்கு இப்படித்தான் பதிலளித்தேன்: ஐரோப்பிய லீக் ஆட்டத்தில் ஒரு கால்பந்து குழு வெற்றிபெற்றதும் அதன் மேலாளரைத் திடீரென்று மாற்றினால் எப்படி இருக்கும். அதைப் போன்று ஒரு பொருத்தமற்ற நடவடிக்கைதான் இது”, என்று ஷா ஆலம் டாட்டாரான் மெர்டேகாவில் கூடியிருந்த கூட்டத்தில் அவர் கூறினார்.

இரண்டு நாள்களுக்குமுன் (மே 7) பாஸ் தலைவர் ஹாடி ஆவாங்-கிடமிருந்து ஒரு கடிதம் வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதில் அவர் காலிட் மந்திரி புசாராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார். அதைக் கேட்டுக் கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.

“இதை நம்பாத பாஸ் உறுப்பினர்கள் என் அலுவலகம் வரலாம். அவர்களுக்கு அதை நான் காண்பிப்பேன்”, என்றார்.

1 khalid theresaபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காலிட், அக்கடிதம் உண்மையில் சிலாங்கூர் சுல்தானுக்கு எழுதப்பட்டது என்றும் அதை அவரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, சிலாங்கூர் டிஏபி தலைவர் தெரேசா கொக் (வலம்), தமது கட்சி காலிட் மந்திரி புசாராவதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை ஏற்கனவே  சுல்தானுக்கு அனுப்பி விட்டதாகக் கூறினார்.

இரண்டு மணி நடந்த அக்கூட்டத்தில் கூட்டத்தினர் அடிக்கடி தாங்களாகவே “டான்ஸ்ரீ காலிட்டை வைத்துக்கொள்ளுங்கள்” என்று முழக்கமிட்டனர்.

‘எதிரிகளைத் தாக்கிப் பேசத் தெரியாது’

1 khalid khalidஇறுதியில், காலிட் இப்ராகிம் பேசியபோது மாநிலத்தின் வளத்தை மக்களுக்குத் திருப்பிக் கொடுப்பதே தம் முதன்மையான பணி என்றார். தமக்குப் பணி செய்யத்தான் தெரியும், பகைவர்களைத் தாக்கிப் பேசத் தெரியாது என்பதால் பேச்சைச் சுருக்கமாக வைத்துக்கொள்வதாகச் சொன்னார்.

தாம் மீண்டும் மந்திரி புசாராக நியமனம் செய்யப்பட்டால், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மாநில அரசின் சாதனைகளை விளக்கும் அறிக்கைகளை வெளியிடப்போவதாக காலிட் கூறினார். சிலாங்கூர் மக்கள், மாநில அரசு என்ன செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்யப்படும்.

1 khalid azminநேற்று இன்னொரு நிலவரத்தில், பிகேஆர் மாநிலத் தலைவர் அஸ்மின் அலி (வலம்), சிலாங்கூர் மாநிலத்துக்கு மந்திரி புசாராக இருப்பவர் மற்றவர்களின் சொல்படி ஆடும் “நொண்டி வாத்தாக” இருக்கக்கூடாது என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை.

சிலாங்கூர் மக்கள் 40 இடங்களுடன் ஒரு வலுவான அதிகாரத்தைக் கொடுத்திருப்பதால் தெளிவான தொலைநோக்கும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட ஒருவர்தான் மாநிலத்துக்குத் தலைமையேற்க வேண்டும் என்றவர் குறிப்பிட்டதாக த ஸ்டார் ஆன் லைன் நாளேடு கூறியிருந்தது.

அவரே மந்திரி புசார் பதவிக்கு அடிபோடுவதாக வதந்திகள்கூட உலவுகின்றன.

இது பற்றியும் காலிட்டிடம் வினவப்பட்டது. அதற்கு அவர், “இதைப் பொதுவில் பேசிக்கொண்டிருக்க முடியாது.

“மூன்று கட்சிகளும் சேர்ந்து முடிவு செய்யும்”, என்றார்.

TAGS: