அமைச்சரவையில் எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்க கைரி தயார்

1 khairi“அவருக்கு (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்)  உதவியாக எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்பேன். முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன்”, என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்.

அமைச்சரவையில் இளைஞர்களின் பிரதிநிதியாக அவரும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு சொன்னார்.

நேற்றிரவு பெர்னாமா டிவி-யில் “ஹல்லோ மலேசியா” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கைரி, இளைஞர்களின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இடம்பெறுவது ஒரு புறமிருக்க, தாம் அதில் இருப்பது உருமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்த ஒரு வலுவான குழுவை அமைக்கவும் உதவும் என்றார்.

“உருமாற்றத்தைப் புரிந்துகொண்டு அதைச் செயல்படுத்தும் திறன்கொண்ட ஒரு குழுவைப் பிரதமர் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்”, என்றவர் கூறினார்.

அண்மைய பொதுத் தேர்தலில், ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியை கைரி தக்க வைத்துக்கொண்டார். 2008-ல்  5,746 வாக்குகள் பெரும்பான்மையில்தான் அவர் வென்றார். ஆனால், இம்முறை அவரின் பெரும்பான்மை 18,357.

அவர் 43,053 வாக்குகள் பெற்று பிகேஆரின் ரட்சாலி ஏ.கனியையும் (24,696) சுயேச்சை வேட்பாளர் அப்துல் அசீஸ் ஹசனையும் (325) வென்றார்.

-பெர்னாமா

 

TAGS: