டிஏபி: மலாய்க்காரர்களும் பக்காத்தானுக்கு ஆதரவு அளித்தனர்

crowdஅண்மைய தேர்தலில் வீசிய ‘மலேசியர் சுனாமியில்’ மலாய்க்காரர்களும் பக்காத்தான் ராக்யாட்டுக்கு  வாக்களித்தனர் என்று டிஏபி தேர்தல் சாணக்கியர் ஒங் கியான் மிங் இன்று கூறிக் கொண்டுள்ளார்.

மலாய்க்காரர்கள் 70 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் பெர்லிஸ், திரங்கானு, பாகாங் போன்ற மாநிலங்களில்  அந்த நிலை காணப்படுகின்றது என அவர் சொன்னார்.

“இரண்டு இன முறை என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறியதையும் ‘சீனர் சுனாமி’ என பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக் சொன்ன கருத்தையும் நான் மறுக்க விரும்புகிறேன்.”

“சீனர் ஆதரவு வலுவாக இருந்தது உண்மை தான். ஆனால் பக்காத்தானுக்குச் சீனர் அல்லாத ஆதரவு கூடிய மற்ற இடங்களும் உள்ளன,” என்று அவர் இன்று காலை டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

கிளந்தான், கெடா தவிர கூட்டரசுப் பிரதேசத்துடன் மொத்தமுள்ள 13 மாநிலங்களில் 11ல் பக்காத்தான் தனது ஆதரவை அதிகரித்துக் கொண்டுள்ளதை ஒங் சுட்டிக் காட்டினார்.crowd1

பக்காத்தானுக்கான ஆதரவு மாற்றம்: பெர்லிஸ் (4.4%), திரங்கானு (3.7%), பினாங்கு (4.8%), பேராக்(1.4%),  பாகாங் (3.8%), சிலாங்கூர் (4%), கூட்டரசுப் பிரதேசம் (2.4%), நெகிரி செம்பிலான் (2.2%), மலாக்கா (3.6%),  ஜோகூர் (10.3%), சபா (3.4%), சரவாக் (8.9%), கெடா (-4.7%) கிளந்தான்(-1.3%).

75.9 விழுக்காடு முதல் 80.7 விழுக்காடு வரை மலாய்க்காரர்களைக் கொண்ட 23 மலாய் பெரும்பான்மை  தொகுதிகளில் பக்காத்தானுக்குச் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை ஐந்து முதல் 16.1 விழுக்காடு வரை  கூடியுள்ளது என ஒங் மேலும் சொன்னார்.

“எடுத்துக்காட்டுக்கு 80.7 விழுக்காடு மலாய்க்காரர்களைக் கொண்ட கங்காரில் பக்காத்தானுக்கான ஆதரவு 16.1 விழுக்காடு கூடியுள்ளது. 76 விழுக்காடு மலாய்க்காரர்களைக் கொண்ட கெப்பாளா பத்தாஸில் பக்காத்தானுக்கான  ஆதரவு 11.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.”

“மலாய் வாக்காளர்களுடைய ஆதரவு அதிகரிக்காமல் அது நிகழ்ந்திருக்க முடியாது,” என அவர் சொன்னார்.

பக்காத்தான் அந்தத் தொகுதிகளில் வெற்றி பெறாததால் அவற்றின் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்றும்  ஒங் தெரிவித்தார்.

TAGS: