‘ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் பேரணி நடத்த வேண்டுமா?’

1azminதேர்தல் மோசடிகளை வேறு வழிகளில் கையாள வேண்டும், அதனால்தான் கறுப்பு 505 பேரணியை ஆதரிக்கவில்லை என டிவிட்டரில் பதிவிட்டிருந்தாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று  தெளிவுபடுத்தினார்.

பக்காத்தான் ரக்யாட் பேரணி நடத்துவதற்குப் பதிலாக தேர்தல் மோசடி பற்றிய தகவல்களைச் சேகரித்து தேர்தல் முறையீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1azmin1“பேரணியில் கூடுவதை நான் எதிர்க்கவில்லை… அரசமைப்பே அதற்கு இடமளிக்கிறது. ஆனால், ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் பேரணி நடத்திக்கொண்டே இருக்க வேண்டுமா?

“அடுத்த தேர்தல் சில ஆண்டுகள் கழித்துத்தான். அதனால் அரசியல் அதிகமாக பேசாமல் பணி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்”, என அஸ்மி (இடம்) கூறினார்.

பக்காத்தானின் மாபெரும் பேரணியில் தாம் கலந்துகொள்ளாததைவைத்து அதைத் தாம் எதிர்ப்பதாக பொருள் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அஸ்மின், வேறு கூட்டங்களில் கலந்துகொண்டதால் அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றார்.

“இந்த விவகாரம் பற்றி (சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரம்) சகாக்களுடன் கூட்டம் நடத்த வேண்டி இருந்ததால் அதில் கலந்துகொள்ளவில்லை. அடுத்தடுத்த பேரணிகளில் கலந்துகொள்வேன்”, என்றவர் வலியுறுத்தினார்.