மந்திரி புசார் பதவி தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் கட்சித் தலைமைத்துவத்தைச் சாடுகிறார்

azmin1சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பதை முடிவு செய்யும் போது சிலாங்கூர் பிகேஆரின் கருத்துக்களை ஒதுக்கி விட்டதாக கட்சித் தலைமைத்துவத்தை அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி  சாடியுள்ளார்.

சிலாங்கூர் பிகேஆர் இணக்கம் இல்லாமல் கட்சித் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் பெயரை முன்மொழிந்து சிலாங்கூர்
அரண்மனைக்கு கடிதத்தைச் சமர்பித்துள்ளதாக அஸ்மின் சொன்னார்.

“துரதிர்ஷ்டவசமாக இணக்கத்தைப் பெறுவதற்கான பிகேஆர் கூட்டம் நேற்று பிற்பகல் வரையில்
நடத்தப்படவில்லை. அந்த விஷயம் மீது விவாதம் நடத்துவதற்காக பிகேஆர் சிலாங்கூர் சட்டமன்ற
உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தொகுதித் தலைவர்களையும் என் சகா அழைத்தார்,”  என்றார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்களும் தொகுதித் தலைவர்களும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் பிகேஆர் ஓர் இணக்கத்துக்கு வந்து தனது வேட்பாளரை கட்சித் தலைவருக்கு சமர்பித்தது. ஆனால் அவர் ஒரு படி முன்னதாக நடவடிக்கை எடுத்து விட்டார் என அஸ்மின் தெரிவித்தார்.

வான் அஜிஸா தன் மூப்பாக செயல்பட்டாரா என அதற்கு அர்த்தமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த
அவர், “ஒரு வழியில் ஆமாம்,” என்றார்.