இசி: தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு இவ்வாண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும்

ecதேர்தல் மனுக்கள் (எதுவும் இருந்தால்) மீதான நீதிமன்ற விசாரணைகள் முடிந்ததும் இவ்வாண்டு இறுதி வாக்கில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைப்புச் செய்யும் நடவடிக்கையை தேர்தல்  ஆணையம் தொடங்கும்.

தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்புப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக தேர்தல் மனுக்கள்
சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்காக ஆறு மாதம் வரை இசி காத்திருக்க வேண்டும் என அதன் துணைத்  தலைவர் வான் அகமட் வான் ஒமார், சின் சியூ நாளேட்டிடம் கூறினார்.

நடப்புச் சட்டங்களின் கீழ் தேர்தல் முடிவுகள் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் அந்த முடிவுகளை ஆட்சேபிக்கும் தேர்தல் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை நீதிமன்றங்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்.

தேர்தலுக்குப் பிந்திய வேலைகளில் இசி இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

ec1தேர்தல் நடைமுறைகளை ஆய்வு செய்வது, கருத்துக்களைத் திரட்டுவது, அரசாங்கத் தகவல் ஏட்டில்  அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தேர்தல் மனுக்கள் சமர்பிக்கப்படாத தொகுதிகளின் வாக்குச் சீட்டுக்களை  எரிப்பது ஆகியவை அந்த வேலைகளில் அடங்கும்.

தேர்தல் மனுக்கள் இருந்தால் இசி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டியிருக்கும் என்றும் வான் அகமட்  சொன்னார்.

தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு 2002ம் ஆண்டு கடைசியாக மேற்கொள்ளப்பட்டது. அதனை  நாடாளுமன்றம் 2003ல் ஏற்றுக் கொண்டது.

கூட்டரசு அரசமைப்பின் படி, இரண்டு தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு இடையில் எட்டு ஆண்டுகளுக்கு குறையாத இடைவெளி இருக்க வேண்டும். அந்த நடவடிக்கை இரு ஆண்டுகளுக்கு நிறைவடைய வேண்டும் என்பது கட்டாயமான காலக்கெடுவாகும்.

 

TAGS: