பாயான் பாருவில் வாக்குகள் வாங்கப்பட்டதாக இசி-யிடம் புகார்

1 voteபினாங்கு பிகேஆர் தலைவர்கள் இருவர், “வாக்குகள் வாங்கப்பட்டது” பற்றி மாநில தேர்தல் ஆணைய (இசி) அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். பாயான் பாரு தொகுதியில் அந்தச் சந்தேகத்துக்குரிய சம்பவம் நடந்ததைத் தாங்கள் நேரில் கண்டதாக அவர்கள் கூறினர்.

1 halimமாநில பிகேஆர் உதவித் தலைவர் அப்துல் ஹாலிம் உசேன் (வலம் ) சுங்கை டூவாவில் ஒரு கடையில் பெரிய கூட்டமொன்று “அதிர்ஷ்டப் பரிசுகளை”ப்  பெற்றுச் செல்லக் கூடியிருப்பதாக தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

கூடியிருந்தவர்கள் தங்கள் அடையாள அட்டையையும் அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டுகளையும் காண்பித்து ரிம120-திலிருந்து ரிம200 வரை பெற்றுச் சென்றதாக  அவர் கூறினார்.

“தொகுதிக்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டது.  உதாரணத்துக்கு பாயான் லெப்பாஸைச் சேர்ந்தவர்களுக்கு ரிம120-தான் கொடுக்கப்பட்டது”, என்று நேற்று ,மாலை மணி 4-க்கு இசி  அலுவலகத்தில் சந்தித்தபோது அவர் தெரிவித்தார். அவருடன் பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸே ட்ஸினும் இருந்தார்.

இது பற்றி ஏற்கனவே பிற்பகல் மூன்று மணிக்கு சுங்கை நிபோங் தெபால் போலீஸ் நிலையத்திலும் அப்துல் ஹாலிம்  புகார் செய்திருந்தார்.

“நாங்கள் எந்தவொரு முடிவுக்கும் வர விரும்பவில்லை. ஆனால், போலீஸ், இசி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை இதை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கேட்டுக்கொள்கிறோம்.

“நாங்களும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்”, என்றாரவர்.

 ‘விருந்துக்கு வரிசையில் நிற்பதுபோல் நின்றனர்’

புகார் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மாநில இசி துணை இயக்குனர் ரிசால் காமிஸ், அதைத் தம் மேலதிகாரியிடம் கொடுக்கப்போவதாகக் கூறினார். பின்னர், அவ்விவகாரம் தொடர்பில் மேல்நடவடிக்கை எடுக்க அது கோலாலும்பூருக்கு அனுப்பி வைக்கப்படும்.

சுங்கை டூவாவில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படும் கடையின் முன்கதவுகளில் இரண்டு மணிலா அட்டைகள் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றில் அம்னோ வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்வரிசை குறிக்கப்பட்டிருந்தது- என்1 (பெனாகா), என்2 (பெர்தாம்), என்3 (பினாங் துங்கால்), என்4 (பெர்மாத்தாங் பெராங்கான்), என்5 சுங்கை டூவா, என்21 (சுங்கை அச்சே), என்38 (பாயான் லெப்பாஸ்), என்39 (பூலாவ் பெத்தோங்), என்40 (தெலுக் பாகாங்).

காலை மணி 11-க்கு 60-70 பேர் பணம் வாங்கிச் செல்ல வரிசை பிடித்து நின்றனர். செய்தியாளர்கள் அவர்களைப் படமெடுக்க முற்பட்டபோது அவர்கள், “முட்டாளே, படமெடுக்காதே”, என்று சத்தமிட்டனர்.

செய்தியாளர்களால் கடைக்குள் சென்று பணம் கொடுத்தவருடன் பேசவும் முடியவில்லை. ஏனென்றால், கூட்டம் வாசலை அடைத்துக்கொண்டிருந்தது.

வரிசையில் நின்ற சிலர்,  “இது மக்களின் பணம், ஐயா”, என்று தங்கள் செயல் சரியானதே என்பதை நிறுவ முயன்றனர்.

அப்துல் ஹாலிமும் சிம்மும் அந்த இடத்தை அடைந்து கூடி நின்றவர்களிடம் கைகுலுக்கினர்.  கூட்டத்தில் இருந்தவர்கள், “இது மக்களின் பணம்.  காய்கறி வாங்கவாவது உதவும்”, என்று விளக்கம் கொடுத்தனர்.

 ‘மற்ற இடங்களிலும்  இதேபோல் நடக்கிறது’

கூட்டத்தில் இருந்த ஒருவர், அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டையும் அடையாள அட்டையையும் கொண்டு வருமாறு நண்பர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினார்,

இதேபோன்ற நடவடிக்கைகள் பாயா தெருபோங், பூலாவ் பெத்தோங் ஆகிய இடங்களிலும் நடப்பதாக பிகேஆர் தலைவர்கள் கூறினர்.

1 simகுறிப்பிட்ட தொகுதிகளில் தாங்கள் வாக்களித்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றதற்காக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என்றால் அது “வாக்குகள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன என்பதற்குத் தெளிவான சான்றாகும்” என சிம் கூறினார்.

அதிகாரிகள் இதை ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிம், “விளிம்புநிலை தொகுதிகளில் பண அரசியல் விளையாடி இருப்பது கண்டு” வருத்தமடைவதாகக் குறிப்பிட்டார்.

“இது உண்மையானால், அப்துல் ஹாலிம்கூட பண அரசியலுக்கு பலியானவர்களில் ஒருவராகத்தான் இருப்பார்”, என்றவர் சொன்னார்.

2008-இல் தெலுக் பாகாங்கில் 465 வாக்குகள் வேறுபாட்டில் தோற்ற அம்னோ, ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் 801 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.

பினாங்கு சட்டமன்றத் தேர்தலில், டிஏபி 19 இடங்களையும், பிகேஆர் 10 இடங்களையும் பாஸ் ஒரு இடத்தையும், அம்னோ 10 இடங்களையும் வென்றன. மசீச, மஇகா, கெராக்கான் ஆகியவை படுதோல்வி கண்டன.

 

TAGS: