காலித் நாளை மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார்

khalidஅப்துல் காலித் இப்ராஹிம் சிலாங்கூர் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு நாளை கிள்ளானில்  உள்ள இஸ்தானா அலாம் ஷா-வில் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவி உறுதி  மொழி எடுத்துக் கொள்வார்.

சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தின் பத்திரிக்கைச் செயலகம் இன்று அந்தத் தகவலை உறுதிப்படுத்தியது.

மே 5 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் யார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்பது தொடர்பில் கடந்த  வாரம் மூண்ட வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் அந்தத் தகவல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதனிடையே சிலாங்கூர் சுல்தான் ஷா அலாமில் உள்ள இஸ்தானா புக்கிட் காயாங்கானில் அப்துல்
காலித்துக்கு இன்று பேட்டி அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அப்துல் காலித் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பட்டியல் இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் 12வது பொதுத் தேர்தலில் சிலாங்கூரைக் கைப்பற்றிய பின்னர் 2008ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி சிலாங்கூர் மாநிலத்தின் 13வது மந்திரி புசாராக அப்துல் காலித் முதல் தவணைக் காலத்திற்கு பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் பாஸ்-டிஏபி-பிகேஆர் ஆகியவற்றைக் கொண்ட
பக்காத்தான் கூட்டணி மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 44ஐ வென்றது. 2008ல் அது 36
இடங்களைப் பிடித்தது.

-பெர்னாமா

TAGS: