அம்னோ தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் சவால் விடுத்ததை அடுத்து பக்காத்தான் ரக்யாட், பொதுத் தேர்தலில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்புக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளது.
இன்றைய பக்காத்தான் செயலக மன்றக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
பக்காத்தானைச் சந்திக்க அப்துல் அசீஸுக்கு விரைவில் அழைப்பு அனுப்பப்படும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
“அப்துல் அசீஸ் (இடம்) பக்காத்தானின் அழைப்பை நிராகரிக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
“அப்படி அவர் செய்தால் (நிராகரித்தால்) இசி தலைவரை இங்கு அழைத்துவர அஹ்மட் உதவ வேண்டும்”, என்று சைபுடின் கூறினார்.
நேற்று, அஹ்மட் தேர்தல் மோசடி, முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அப்துல் அசீஸிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டு அவரை அழைத்து விளக்கம் கேட்க பிகேஆர் தயாரா என்றும் சவால் விடுத்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.