பாஸ் தலைமை ஏற்றிருந்த கெடா அரசு பிஎன்னிடம் தோற்றதற்குக் குறைகூறல்களை ஏற்கும் மனப்பக்குவம் இல்லாமையும் மந்திரி புசார் திறமையாக செயல்படாததும் முக்கிய காரணங்களாகும்.
பாஸ் தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்ட கிளந்தானுடன் ஒப்பிட்டால் இது தெளிவாகத் தெரியும் என மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல்மீதான ஆய்வுமைய (யுஎம்சிடெல்) இயக்குனர் முகம்மட் ரிட்சுவான் ஒத்மான் கூறுகிறார்.
“நாங்கள் ஒரு வலுவான கட்சி, நீண்டகாலமாகக் கடுமையாக உழைத்து வருகிறோம் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதால் மட்டும் வெற்றிபெற முடியாது.
“கெடாவின் பாஸ் கிளந்தானில் உள்ள பாஸ் போன்றதல்ல. கிளந்தானில் எட்டுப்பேரிடம் கேட்டால் நால்வர் பாஸை ஆதரிப்பார்கள், மூவர் பிஎன்னை ஆதரிப்பார்கள், ஆனால், எண்மருமே (முன்னாள் மந்திரி புசார்) நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்டுக்குத்தான் வாக்களிக்கப்போவதாகச் சொல்வார்கள்”, என்றாரவர்.
“அசிசான் அப்துல் ரசாக் (முன்னாள் கெடா எம்பி) மருத்துவமனையில் இருக்கிறார். எனவே, அது பற்றி விரிவாக எடுத்துரைக்க நான் விரும்பவில்லை. ஆனால், முடிவு எப்படி இருந்தது என்பது நம் அனைவருக்குமே தெரியும்”.
தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட முகம்மட் ரிட்சுவான், சிலாங்கூரிலும் அதுதான் நடந்தது என்றார். அங்கு பக்காத்தானின் வெற்றிக்கு அப்துல் காலிட் இப்ராகிம் முக்கிய காரணமானமாவார்.
“மாநிலம் முழுவதும் அவரின் மக்கள் செல்வாக்கு 60 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்தது.
”காலிட்டுக்கு (வலம்) ஆதரவாக இருந்தவர்களில் மிகப்பலர் அரசு ஊழியர்களும் அரசுசார்ந்த நிறுவனப் பணியாளர்களுமாவர்”.
பிஎன்னைப் பொறுத்தவரை, இவர்தான் சிலாங்கூரின் மந்திரி புசார் என்று ஒருவரை அடையாளம் காட்டத் தவறியதும் அங்கு அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும்.
“இப்போதைய வாக்காளர்கள் தகவல் தெரிந்தவர்கள். அவர்கள் கட்சியை அல்லது வேட்பாளரைப் பார்ப்பதில்லை. நிர்வாகத்தின் அடைவுநிலையைப் பார்க்கிறார்கள்”, என்பதை அவர் வலியுறுத்தினார்.
கெடாவின் பாஸ், கட்சிக்கு சாதகமாக இல்லாத ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தது என்றும் முகம்மட் ரிட்சுவான் கூறினார்.
“கிளந்தான் பாஸ் நாங்கள் கண்டறிந்து கூறியதை ஏற்றுக்கொண்டு, குறைகளைத் திருத்திக்கொள்ள முனைந்தது. கெடா ஏற்க மறுத்தது…
“நெகிரி செம்பிலானிலும் கெடாவிலும் பாஸ் பிரச்னைகளை எதிர்நோக்குவதாக நாங்கள் சுட்டிக்காட்டியபோது அவற்றின் துணை ஆணையர்கள் எங்களைச் சாடினர்”, என்றாரவர்.
மேலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கெடாவில் பக்காத்தான் கட்சிகளுக்கிடையில் ஒத்துழைப்பு குறைவு என்றுதான் கூற வேண்டும்.
“கெடாவில் கடைசிவரை டிஏபிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை”, என்றார்.
நகர்புற, புறநகர் மலாய்க்காரர்களிடையே வாக்களிக்கும் முறையில் வேறுபாடு
ஒரு சாராசரி மலாய் வாக்காளரின் எதிர்பார்ப்புத்தான் என்ன என்று பார்வையாளர் பகுதியிலிருந்து முன்வைக்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடை பகர்ந்த முகம்மட் ரிட்சுவான், அதற்குச் சரியான பதிலளிக்க இயலாது என்றார். ஏனென்றால், மலாய்க்காரர்கள் அனைவருமே ஒரே வகையினர் அல்லர்.
புறநகர் மலாய்க்காரர்களுக்கு, அங்குள்ள மற்றவர்களைப்போலவே, தகவலறியும் வசதி போதுமான அளவில் இல்லை. அவர்கள் பெரும்பாலும் பிஎன்னுக்குத்தான் வாக்களிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால், நகர்புறங்களில் உள்ள அவர்களின் சகோதரர்கள் பக்காத்தானை ஆதரிக்கிறார்கள்.
“(புறநகர் பகுதிகளில்) மலாய்க்காரர்கள் இருக்கும் நிலை தொடரவேண்டும் என நம்புகிறார்கள். நன்றிக் கடன் மறவாதவர்கள்.
“நாங்கள் சந்தித்தவர்கள் , ‘இந்தா பாருங்கள் ரிம500 கொடுத்தார்கள். வாங்கிக்கொண்டோம். அதனால் அவர்களுக்கு வாக்களிப்பதில் என்ன தப்பு’ என்று கேட்கிறார்கள்”. 1மலேசியா மக்கள் உதவித் திட்டத்தின் (பிரிம்)கீழ் பணம் கொடுக்கப்பட்டதைத்தான் அவர்கள் குறிப்பிட்டனர். அது வாக்காளரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுஎம்சிடெல் மேற்கொண்ட ஆய்வில் இணையத் தொடர்புள்ள பகுதிகளில் பக்காத்தானுக்கே ஆதரவு அதிகம் இருப்பது தெளிவாக தெரிந்தது.
மலாயாப் பல்கலைக்கழகம் போன்ற உயர்க்கல்வி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பக்காத்தானே பெரும்பாலும் வென்றுள்ளது.
லெம்பா பந்தாயில் பிரிம் உதவித் தொகை, வாக்காளர்களில் ஒரு பகுதியினரைத்தான் கவர்ந்தது. ஆனால், ஜோகூர் புறநகர் பகுதிகளில் 87 விழுக்காட்டினர் அதனால் கவரப்பட்டனர் என்றாராவர்.
கெடாவில் பாஸ் கட்சியின் ஆட்சி சிறப்பில்லாததால் அது பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தது.மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு நடக்கும் ஆட்சிக்கே மக்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்ற சித்தாந்தத்தை கெடா பாஸ் கட்சி அறிந்திருக்கவில்லை.இதுதான் அவர்களின் தோல்விக்கு காரணம்.