லிம் குவான் எங்: அது விசுவாசிகள் அமைச்சரவை, வெற்றியாளர் அமைச்சரவை அல்ல

limபுதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை ‘விசுவாசிகள் அமைச்சரவை’ என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார்.

புதிய அமைச்சரவையை ‘வெற்றியாளர் அமைச்சரவை’ என வருணித்து முதல் பக்கத்தில் செய்தி
வெளியிட்டுள்ள மசீச-வுக்குச் சொந்தமான தி ஸ்டார் நாளேட்டை கிண்டல் செய்த அவர், பிரதமருடைய நல்லெண்ணத்தை பெற விரும்பும் அந்த ஏடு மிதமிஞ்சி சென்று விட்டதாகச் சொன்னார்.

நேற்று அமைச்சரவைப் பட்டியலை அறிவித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் லிம் குறை கூறினார்.

“அவர் ஏன் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நியமிக்கவில்லை ?” என அவர் வினவினார்.

பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப்புக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பூலாய் எம்பி
நூர் ஜஸ்லான் முகமட் ஆற்றல் மிக்கவர் என்பதை லிம் சுட்டிக் காட்டினார்.

“அது நிச்சயம் விசுவாசிகள் அமைச்சரவை. அது தேர்ச்சி அடிப்படையில் மேலிருந்து கீழாகச்
செல்கிறது. அடித்தட்டு உறுப்பினர்கள் ஆதரவு அடிப்படையில் அது கீழிருந்து மேலே போகவில்லை,”
என அவர் வலியுறுத்தினார்.

“மூன்று செனட்டர்கள் அமைச்சர்களாகியுள்ளனர். வரலாற்றில் இது மிக அதிக எண்ணிக்கையாகும்.
வாக்காளர்களுடைய ஜனநாயக விருப்பங்களை அது மதிக்கவில்லை,” என டிஏபி தலைமைச்
செயலாளருமான லிம் சொன்னார்.

“அந்த விசுவாசிகள் அமைச்சரவை அம்னோவின் இனப் பிரிவினை, தீவிரவாதம், ஊழல், இரண்டாம்
தரம் ஆகிய சித்தாந்தங்களை பின்பற்ற மாட்டோம் என்பதை நிரூபிக்க முடியுமா ?”

பிரதமர் துறையில் ஒர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மலேசிய அனைத்துலக வெளிப்படை (TI-M)
அமைப்பின் பால் லோ-வுக்கும் லிம் ஒரு பணியை முன்மொழிந்தார்.

“அவருடைய நேர்மை வாக்குறுதி பயனுடையது என்பதை லோ நிரூபிக்க வேண்டும். எல்லா
அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிப்பதையும் குத்தகைகளை
வழங்குவதில் திறந்த டெண்டர் முறையை அரசாங்கம் பின்பற்றுவதையும் அவர் உறுதி செய்ய
வேண்டும்,” என்றார் அவர்.

“அந்த இரண்டு காரியங்களையும் அவர் செய்யா விட்டால் அவர் நஜிப்பின் விசுவாசி என்பதை
மட்டுமே நிரூபிக்கிறார்,” என லிம் மேலும் சொன்னார்.

புதிய அமைச்சரவை சமாளிப்பதற்கு அவர் மூன்று சவால்களையும் அவர் முன் வைத்தார்.
குற்றச்செயல்களைக் குறைப்பது, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ‘தூய்மையாக நடந்து கொள்வது’, பெரும்பாலான மாநகரங்களில் காணப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தீர்ப்பது ஆகியவையே அந்த பணிகளாகும்.

அண்மைய தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்ற மசீச தலைவர்களுக்கு எந்தப் பதவியும்
வழங்கப்படாதது குறித்து கருத்துரைத்த லிம் ‘அவர்களுக்கு ஒர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக’
புன்னகையுடன் கூறினார்.

“அவர்கள் ஒர் ஆண்டுக்கு நாடகத்தை நடத்தட்டும். பின்னர் அவர்களுக்கு அந்தப் பதவி
கொடுக்கப்படும்,” என்றார் அவர்.

தற்காப்பு அமைச்சரான ஹிஷாமுடின் ஹுசேன் போக்குவரத்து அமைச்சுக்கு இடைக்கால அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சர் பதவி வழக்கமாக மசீச-வுக்கு வழங்கப்படும்.

 

TAGS: