அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா இன்று தனது முதல் பக்கச் செய்தியில் செய்தி இணையத் தளமான மலேசியாகினி அரசர் அமைப்பு முறையைக் கீழறுப்புச் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

“சுல்தான் ஆணை குறித்து கேள்வி எழுப்புவது கண்டிக்கப்பட வேண்டும்” என்னும் தலைப்பிலான அந்தச் செய்தி, மலேசியாகினியை கண்டிக்கும் இரண்டு உட்பக்கக் கட்டுரைகளுக்கு முன்னுரையாக அமைந்துள்ளது.

“ஊடக நிறுவனம் என்னும் முறையில் மலேசியாகினி விவேகமாக நடந்து கொள்ளத் தவறி விட்டது. அந்தக் கருத்துக்களை வெளியிட்டதின் மூலம் அது சிலாங்கூர் சுல்தானுடைய நம்பகத்தன்மையை தெளிவாகக் கீழறுப்புச் செய்துள்ளது”, என மலேசிய இளைஞர் மன்றத் தலைவர் முகமட் மாலிக்கி முகமட் ராபி கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றின் தொடர்பில் சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட ஆணை மீது அரசியலமைப்பு சட்ட நிபுணர் அப்துல் அஜிஸ் பேரியை மேற்கோள் காட்டி மலேசியாகினி வெளியிட்ட கட்டுரை மீது வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் பற்றி முகமட் மாலிக்கி அவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகார மன்றம் மேற்கொண்ட சோதனை தொடர்பில் சுல்தான் தலையிட்டது வழக்கத்திற்கு மாறானது என அப்துல் அஜிஸ் அதில் வருணித்திருந்தார்.

மாநிலத்தின் தலைவர் எந்த ஒரு தலையீடும் சமயக் கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

அப்துல் அஜிஸ் பேரி, சுல்தானுக்கு மரியாதை கொடுக்கவில்லை என மலேசிய மலாய் கட்டமைப்பின் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா குற்றம் சாட்டியதாகவும் உத்துசான் செய்தி குறிப்பிட்டது.

அதே பக்கத்தில் வெளியிட்டுள்ள இன்னொரு தகவலில் மலேசியாகினியை விசாரிக்குமாறு அரசாங்கத்தை செனட்டர் எஸாம் முகமட் நூர் கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முக்கிய அமைப்புக்களுக்கு எதிராக அதிருப்தியை தூண்டுவதே அவர்களது நடவடிக்கையின் நோக்கமாகும். அதன் மீது வாசகர்கள் கருத்துத் தெரிவிக்க அனுமதிப்பதும் பிரச்னை மீது மேலும் பூசலை வளர்ப்பதாகும்”, என எஸாம் சொன்னதாகவும் அந்தச் செய்தி குறிப்பிட்டது.

ஜயிஸ் அறிக்கை அடிப்படையில் முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கான முயற்சிகளுக்கான அறிகுறிகள் இருந்தன என்றும் ஆனால் எந்தத் தரப்பு மீதும் நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என்றும் கடந்த திங்கட்கிழமையன்று சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.