கனிக்கு பதவி கொடுக்கப்படாததால் கிட் சியாங் வருத்தம்

1 ghaniபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய அமைச்சரவையில் முன்னாள் ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மானுக்கு  இடமளிக்காதது ஏமாற்றமளிப்பதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.

அண்மைய தேர்தலின்போது அம்னோ அதன் பரப்புரைகளில் கனியை வானளாவ புகழ்ந்து பேசியது, ஆனாலும் அமைச்சரவையில் அவருக்கு இடம்கொடுக்கப்படவில்லை என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

1 ghani1“கேலாங் பாத்தாவில் கனி என்னைத் தோற்கடிக்கத் தவறினார் என்பதற்காக  அவரை அம்னோ தலைவர்கள் கைவிட்டது அநியாயமாகும்,  நன்றிகெட்ட செயலாகும்”,  என லிம் (வலம்) கூறினார்.

மே 5  தேர்தலில் லிம்மும் கனியும் போட்டியிட்டதில் லிம்முக்கு 54,284 வாக்குகளும் கனிக்கு 39,522 வாக்குகளும் கிடைத்தன.  கனி, தேர்தலில் தோற்றுப்போனது அதுவே முதல் முறையாகும்.

ஜோகூரின் மேம்பாட்டுக்கு கனி பெருமளவு பாடுப்பட்டிருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்ட லிம், அவரை அமைச்சராக்கி  அவரது அனுபவத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.

அம்னோவிலேயே சிலர், கனி தேசிய அரசியலுக்குத் திரும்புவதை விரும்பவில்லை என்பது தமக்கு வியப்பளிப்பதாக லிம் கூறினார்.  பாரிசான் நேசனல் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சங்கம்  (முபாராக்)  அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றாரவர்.

முபாராக், தேர்தலில் தோல்வி கண்டவர்களுக்கு அரசாங்கப் பதவி கொடுக்கக்கூடாது என்று கூறி இருந்தது. இது, கனியை இலக்காக வைத்துச் சொல்லப்பட்டது என்று லிம் கூறினார்.

“முபராக் அவ்வாறு கூறியதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தெரிந்தால் நன்றாக இருக்கும்…..அது, அம்னோவுக்குள் நிலவும் பதவிப் போராட்டம் பற்றி…அம்னோ கட்சித் தேர்தலுக்காக நடக்கும் ஆயத்தங்கள் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்”, என்றார்.