அது ஜாஹிட்டின் சொந்தக் கருத்து என்கிறார் கைரி

khairi13வது பொதுத் தேர்தல் முடிவுகளைக் குறைகூறுவோர் புலம் பெயர்ந்து செல்லலாம் என்று புதிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் அமீடி கூறியதைத் தற்காத்துப் பேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அது அவரது சொந்தக் கருத்தாகும் என்று கூறினார்.

“அது அவரது தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் நிலைபாட்டைப் பிரதிபலிக்கவில்லை”. கைரி இன்று தமது அமைச்சில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

khairi1ஜாஹிட், நாட்டின் தேர்தல்முறையை விளக்கி, மக்கள் வாக்குகளைப் பெரும்பான்மையாக பெறாத நிலையிலும் பிஎன் அரசாங்கத்தை அமைத்தது சரியே என்பதை நியாயப்படுத்தியபோது அவ்வாறு கூறினார் என்று புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்ற கைரி சொன்னார்.

“நம் நாட்டில் இருப்பது நேரடி ஜனநாயகம் அல்ல. அதிகமான வாக்குகள் பெற்றவரே அரசாங்கத்தை அமைப்பது என்ற முறை இங்கு இல்லை.

“நமது நாடாளுமன்ற ஜனநாயகம் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டது. எனவே இந்த முறைப்படி அமைந்த தேர்தல் முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்”, என்றவர் கேட்டுகொண்டார்.

ஜாஹிட், நாட்டின் தேர்தல்முறையில் அதிருப்தி கொண்டவர்கள் “வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லுங்கள்” என்று கூறியதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு அறிவித்திருந்தது.

மே 5 பொதுத் தேர்தல் முடிவுகளில் மோசடி நிகழ்ந்திருப்பதாகக் குறைகூறுவோரை விமர்சித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

TAGS: