நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 5 ஆண்டுகளில் தீர்வு காண வேதா நம்பிக்கை

1 hind1இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தாமும் இண்ட்ராபும் நாட்டில் நாடற்றவர்களாகவுள்ள இந்தியர்கள் விவகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளில் தீர்வுகாண முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

அண்மையில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அமைச்சரவையில் பிரதமர் துறை துணை அமைச்சராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கும் வேதமூர்த்தி, மாற்றரசுக் கட்சியினர்  தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நூறே நாள்களில் அவ்விவகாரத்துக்குத் தீர்வுகாணப்படும் என  வாக்குறுதி அளித்தது உண்மைக்குப் புறம்பானது என்றார்.

“அன்வார் இப்ராகிம் தேசிய பதிவுத்துறையால் தீர்வுகாண முடியாதிருக்கும் நாடற்ற இந்தியர்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாணப்படும் என்று கூறினார். 20,000 பேர் பிரச்னைக்குத் தீர்வுகாண்பது பற்றித்தான் அவர் பேசுகிறார்.

“அவரின் உதவித் தலைவர் என். சுரேந்திரனே 280,000 இந்தியர்கள் நாடற்றவர்களாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அவர்களைப் பற்றி அவர் பேசவில்லை”, என்று வேதமூர்த்தி இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

நாடற்றவர் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான ஒரு வழிமுறையை இண்ட்ராப் வைத்திருப்பதாக வேதமூர்த்தி கூறினார். ஆனால், அது என்னவென்பதை அவர் விவரிக்கவில்லை.

துணை அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசவில்லை

1 hindrafகடந்த மாதம் இண்ட்ராபுக்கும் பிஎன்னுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) கையெழுத்தானபோதே துணை அமைச்சர் பதவிக்கும் பேரம்பேசி ஒப்புக்கொள்ளப்பட்டதெனக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

“எம்ஓயு-வில் குறிக்கப்பட்ட ஐந்து பகுதிகளைச் செயல்படுத்த அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட  பணியாளர் குழு தேவை என்றும் அதற்குப் பொறுப்பான ஒருவர் தலைமை தாங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம். அக்குழுவுக்கு நாங்களே தலைமையேற்பது என்றும் ஒரு புரிதல் இருந்தது”, என்றாரவர்.

தம்மைக் குறைகூறுவோர் “சொல்வதைச் சொல்லிக்கொள்ளட்டும்” தமக்குக் கவலை இல்லை என்றார்.

“குறைகூறுவோரை அப்படிக் கூறியதற்காக வருத்தப்பட வைப்போம். மக்களைத் தவறான வழியில் இட்டுச்செல்ல முனையும் உங்களை மக்கள் அடுத்த தேர்தலில் கவனித்துக்கொள்வார்கள். உண்மையில், உங்களில் எவரும் தோட்டப்புறங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் பற்றிக் கவலைப்பட்டதில்லை”.

தேர்தல் பரப்புரைகளில் இண்ட்ராப் தலைவர்கள் அநியாயமாக “பலிகடா” ஆக்கப்பட்டதாக வேதமூர்த்தி கூறினார்.

“தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கிடையில் நடக்கும் போராட்டம். அதில் நாங்கள் பலிகடாக்கள் ஆக்கப்பட்டு குறைகூறப்பட்டோம். அதுதான் வேடிக்கை”, என்றார்.

வேதமூர்த்தி அமைச்சரவையில் இணைந்து அதிகாரப்பூர்வமாக பணியாற்றுமுன்னர் செனட்டராக்கப்பட வேண்டும். அவர் எப்போது செனட்டராக்கப்படுவார் என்பது திங்கள்கிழமை தெரியும்.

TAGS: