‘வென்றவர் மனம் புழுங்குகிறார்; தோற்றவர் மனம் மகிழ்கிறார்’

rallyஉங்கள் கருத்து : ‘பக்காத்தானின் தேர்தலுக்குப் பிந்திய பேரணிகளில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது. ஆனால், பிஎன்னோ மனக்கசப்பைக் காட்டுகிறது, தன்னை ஆதரிக்காதவர்களைப் பழிக்குப் பழி வாங்கப்போவதாக மிரட்டுகிறது’.

போலீஸ் எச்சரிக்கையை மீறி 60,000 பேர் பேரணியில் திரண்டனர்

மொஹிகன்: பலே பக்காத்தான். ஜனநாயக வழியில் அமைதியான பேரணிகள் மூலமாக மக்களின் ஆற்றலை வெளிக்காட்டுவதுதான் சிறந்த வழி.

இதைக் கண்டு போலீஸ் கலவரமடையத் தேவையில்லை. ஒரு மலேசியன் அவனது நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பைக் காட்ட நினைத்தால் அது தேச நிந்தனை ஆகாது. அதுதான் அடிப்படை மக்களாட்சி, அதுதான் மனித உரிமை.

சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறையால் கவிழ்க்க நினைத்தால் அதுதான் தேசநிந்தனை. நீல உடை தரித்த நண்பர்களே, “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக” இருத்தல் வேண்டும். அதுதான் முக்கியம்..

பெயரிலி_4031: விளங்காதவர்களா போலீசார்? வெற்றியைக் கொண்டாடுவதில் என்ன’யா தப்பு?

பிஎன் விருந்துகள் வைக்கலாம், பக்காத்தான் வைக்கக்கூடாதா? தயவு செய்து  சிந்தித்துப் பாருங்கள்.

நேராக சிந்திப்பவன்:  செவ்வாய் கோளிலிருந்து இப்போதுதான் வந்திறங்கியவர் என்றால், பொதுத் தேர்தலில் வென்றது பக்காத்தான் என்றே நினைப்பார். பக்காத்தானின் தேர்தலுக்குப் பிந்திய-பேரணிகளில் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும்.

இதற்கு மாறாக  பிஎன்னோ மனக்கசப்பைக் காட்டுகிறது, தன்னை ஆதரிக்காதவர்களைப் பழிக்குப் பழி வாங்கப்போவதாக மிரட்டுகிறது. மலேசியாவில் மட்டும்தான் வென்றவர் மனம் புழுங்குவதையும் தோற்றவர் மனம் மகிழ்வதையும் காணலாம்.

கேஎஸ்என்: அமைதியான முறையில் ஒன்றுகூடுவது குடிமக்களின் அடிப்படை உரிமை. அரசமைப்பு அதற்கு உத்தரவாதமளிக்கிறது.

போலீசார் சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும்கூட 60,000பேர் அமைதியாக ஒன்று கூடினர். அதன்வழி அவர்கள், தங்கள் உரிமைகளையும் அவற்றைப் பொறுப்புடன் பயன்படுத்தும் வழிமுறையையும் அறிந்தவர்கள் தாங்கள் என்பதையும் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடிக்கும், போலீசுக்கும், அம்னோ பாரு அரசாங்கத்துக்கும் உணர்த்தி இருக்கிறார்கள்.

புதிய உள்துறை அமைச்சரோ, தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லையா, நாட்டைவிட்டு வெளியேறு என்கிறார். இதுதான் தேச நிந்தனை. இதற்கு புதிய ஐஜிபி-யைப் பெற்றுள்ள போலீஸ் என்ன செய்யப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

பெட்டர் மை: தேர்தல் மோசடிக்கான ஆதாரங்களைக் காண்பித்தும் நீதிமன்றங்களில் தேர்தல் முறையீட்டு வழக்குகள் நிராகரிப்பட்டால் பக்காத்தானும் அன்வார் இப்ராகிமும் என்ன செய்வார்கள்? மாற்றுத் திட்டம் ஏதேனும் உண்டா?

தே தாரிக்:  சுதந்திரமாக செயல்படாத நீதிமன்றங்களில் தேர்தல் மோசடி வழக்கு எடுபடாது. அதனால் நேரம்தான் விரயமாகும்.

விசாரணை, மாதக் கணக்கில் இழுத்துக்கொண்டு போகும். தேர்தல் ஆணையம் (இசி) ஒத்துழைப்பதும் சந்தேகமே. இசி பாதகமான ஆதாரங்களை இதற்குள் அழித்திருந்தால் அல்லது மாற்றி இருந்தால்கூட வியப்படைவதற்கில்லை.

முஷிரோ:  பினாங்கு சகோதர, சகோதரிகளுக்கு பாராட்டுகள். அம்மாபெரும் பேரணி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக் கலக்கத்தைக் கொடுத்திருக்கலாம். இனி, அது போன்ற பேரணிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று போலீசைப் பயன்படுத்தி மிரட்டுவார்கள். நம் உரிமைகளைக் காக்க உறுதியுடன் இருப்போம்.

TAGS: