சாபாவில் 66,000 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது

1 rciசாபாவில், 1963-க்கும் 2012-க்குமிடையில் குடியுரிமை வழங்கப்பட்டவர் எண்ணிக்கை  அதே காலகட்டத்தில் சரவாக்கில் குடியுரிமை  வழங்கப்பட்டவர்களைவிட  11 மடங்குக்கும் அதிகமாகும் என அரச விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டது.

அரச விசாரணை ஆணையத்தின் விசாரணை   கோட்டா கினாபாலு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது . அதில்  63-வது சாட்சியாக சாட்சியமளித்த  சரவாக் தேசியப் பதிவுத் துறை இயக்குனர் அபு பக்கார் மாட்,  சரவாக்கில் குடியுரிமை வழங்கப்பட்டவர் எண்ணிக்கை  5373 எனக் கூறினார்.

“அதே காலகட்டத்தில்  சாபாவில்  66,000 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது”, என விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப்  குறிப்பிட்டார்.

ஏன்  இவ்வளவு பெரிய வேறுபாடு என்று வினவியதற்கு, சாபாவின் எல்லைகளைக் கடப்பது எளிதாக இருப்பது காரணமாக இருக்கலாம் என அபு பக்கார் கூறினார்.

“சரவாக் இருக்கும் இடமும் அதன் அரசியலும் வேறுபட்டிருப்பதாக நினைக்கிறேன்.

“சாபா பிலிப்பீன்சுக்கு அருகில் இருக்கிறது. இது, வெளிநாட்டு குடிமக்கள் வெள்ளம் எனப் பெருக்கெடுத்துவர காரணமாக இருந்திருக்கலாம்.  அந்த வெள்ளப் பெருக்கு சரவாக்கை எட்டவில்லை”, என்றாரவர்.

1 abu bakarசாபா, கள்ளக்குடியேறிகளைத் தடுக்க எல்லைகளில் குடிநுழைவுத்துறை கண்காணிப்பையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்றாரவர்.

சரவாக்கில் குடியுரிமை பெற சத்திய பிரமாணம் மட்டும் போதாது என்று அபு பக்கார் கூறினார்.

சரவாக்கில் பிறப்புச் சான்றிதழ் பெற்றிராதவர்கள், கிராமத் தலைவர்கள் அல்லது நீண்ட வீடுகளின் தலைவர்களின் சட்டப் பிரகடனத்தையும் கொண்டுவர வேண்டும்.

“அப்பிரகடனம் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கிராமத் தலைவர்களையும் நாங்கள் சந்திப்பது உண்டு”, என்றவர் சொன்னார்.

அரசாங்கப் பிரதிநிதிகள் கொடுக்கும் ‘சட்டச் சான்றிதழ்களை’ஏற்றுக்கொள்வதை சரவாக் என்ஆர்டி 1988-இலேயே நிறுத்திக்கொண்டது.

 

 

TAGS: