அன்வார் ‘அவதூறு மன்னன்’ என இசி குற்றம் சாட்டுகின்றது

ECபாதுகாப்புப் படை வீரர்கள் முன் கூட்டியே செலுத்திய 500,000 வாக்குகள் ‘திருத்தப்பட்டுள்ளதாக’  பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளது மீது அதிருப்தி அடைந்துள்ள  தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், அந்த பெர்மாத்தாங் எம்பி  ‘அவதூறு மன்னன்’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏப்ரல் 30ம் தேதி -தேர்தல் தினத்துக்கு ஐந்து நாட்கள் முன்னதாக- செலுத்தப்பட்ட வாக்குகள்  எண்ணிக்கை 230,000 என்றும் அவை பாதுகாப்புப் படை வீரர்களும் அவர்களது மனைவியரும்
செலுத்தியவை என்றும் அவர் சொன்னார்.

ஆகவே அன்வார் தமது தனிப்பட்ட பேராசைக்காக பொய் சொல்கிறார், இசி-யை பலிகடா-வாக்க
முயலுகிறார் என்றும் அவர் சொன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“அவர் அவதூறு மன்னன். அன்வார் நடவடிக்கைகளை சட்டங்கள் கவனிக்கட்டும். அவதூறு
சொல்கின்றவர்களையும் பொய்களைப் பரப்புகின்றவர்களையும் இறைவன் அம்பலப்படுத்துவான்,”
எனவும் வான் அகமட் கூறினார்.EC1

பொதுத் தேர்தலில் முன் கூட்டியே செலுத்தப்பட்ட 500,000  வாக்குகளை  ‘பிஎன் வெற்றி பெறுவதற்கு உதவியாகதிருத்துவதில்’ இசி சம்பந்தப்பட்டிருந்ததாக கடந்த சனிக்கிழமை பினாங்கில் நிகழ்ந்த  பேரணி ஒன்றில் அன்வார் கூறிக் கொண்டிருந்தார்.

பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் முன் கூட்டியே செலுத்தப்பட்ட வாக்குகளில் ஐந்து விழுக்காடு  மட்டுமே தமக்குக் கிடைத்ததாக கூறிக் கொண்ட அன்வார், அந்த வாக்குகளில் 95 விழுக்காடு தமக்கு வரும் எனத் தான் முன்னரே அறிந்திருந்ததாக அன்வார் சொன்னார்.

தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடையாதவர்கள் இந்த மாத இறுதியில் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்
தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் மனுவைச் சமர்பிக்கலாம் என வான் அகமட்
குறிப்பிட்டார்.

இசி-யின் சட்ட ஆலோசகர்கள் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆய்வு
செய்வதாகவும் அன்வாருக்கு எதிராக அடுத்த நடவடிக்கையை எடுக்கும் முன்னர் ஆதாரங்களைத்
திரட்டுவதாகவும் அவர் சொன்னார்.

“இசி அமைதியாக இருக்காது என்றாலும் சட்ட விதிகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பதால் மிகவும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது,” என வான் அகமட் தெரிவித்தார்.