‘இது உங்க அப்பன் நாடும் அல்ல’, ஜாஹிட் பதிலடி (விரிவான செய்தி)

1zahidஉள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில்,  “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார்.

தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன் நாடும் அவரின் அப்பன் நாடும் அல்ல” என்றார்.

இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய ஜாஹிட், “இதை அப்படியே மலேசியாகினியில் எழுத வேண்டும்”,என்றார்.

“நீங்கள்தான் (மலேசியாகினி) எப்போதும் கதை கட்டுவீர்களே.  தயவு செய்து இதழியல் நெறிமுறையைப் பின்பற்றி எழுதுங்கள்”, என்றவர் மலேசியாகினி செய்தியாளரை நோக்கிக் கூறினார்.

முன்னதாக, உத்துசான் மலேசியாவில் அவர் சொன்னதாக வெளியிடப்பட்டிருந்த கருத்துகளுக்காக மன்னிப்பு  கேட்க வேண்டும் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளதற்கு ஏற்ப மன்னிப்பு கேட்பாரா என்று மலேசியாகினி செய்தியாளர் கேட்டதும்  அமைச்சர் சீற்றம் கொண்டார்.

“என் கருத்தைத் திரித்துக்கூறியதற்காக லிம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை”, என்று கடுமையான குரலில் கூறினார்.

அதன்பின் செய்தியாளர்மீது பாய்ந்தார். “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”, என வினவினார்.

1 zahid 1அதைச் சொன்னதும், “அதானே பார்த்தேன். நீங்கள் (மலேசியாகினி) எப்போதும் நான் சொல்வதைத் திரித்துத்தானே கூறுவீர்கள். அடிக்கடி அப்படி நடக்கிறது.

“பிரச்னை இல்லாத இடங்களிலும் பிரச்னையை உண்டு பண்ணுகிறீர்கள். மன்னிப்பு கேட்க வேண்டியது அவர்தான். நானல்ல, சரியா”, என்று திரும்பவும் கூறினார்.

தேர்தல் சீர்திருத்தம் கோரிய மாணவ சமூக ஆர்வலரான ஆடம் அட்லியைத் தடுத்து வைத்திருக்கிறீர்களே, ஏன் மாற்றரசுக் கட்சித் தலைவர்களைக் கைது செய்யவில்லை என்று வினவியதற்கு அதற்குப் பதிலளிக்கும் பொறுப்பைப் போலீஸ் படைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

“அதற்கு நான் பதில் சொன்னால்,  அச்செயலுக்கு அரசியல்தான் காரணம் என்பார்கள் (மாற்றரசுக் கட்சியினர்). காலிட் அபு பக்கார் (ஐஜிபி) அதற்குப் பதில் கூற விரும்பலாம்”, என ஜாஹிட் கூறினார்.

ஐஜிபி பின்னர் அதற்குப் பதிலளிப்பதாகக் கூறியதும் அமைச்சர் மீண்டும் மலேசியாகினிமீது கண்டனக் கணைகள் பொழிந்தார்.

“மலேசியாகினிக்கு வேறு என்ன தெரிய வேண்டும்? கதை கட்டி விடாதீர்கள். மலேசியாகினியின் ஒவ்வொரு தொடரையும், பாராவையும்  கூர்ந்து பார்ப்பேன். நெருப்புடன் விளையாடாதீர்கள்”, என எச்சரித்தார்.

முன்னதாக ஒரு கேள்விக்குப் பதிலளித்த ஐஜிபி, தேர்தல் மோசடி என்று கூறி அதற்கெதிராக தொடர்ந்து நடத்திவரும் பேரணிகள் தொடர்பில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்.

TAGS: