சிலாங்கூர் மந்திரி புசாருடன் ஒரு நேர்காணல்
இரண்டாம் தவணைக்கு சிலாங்கூர் மந்திரி புசாராக பொறுப்பேற்றுள்ள காலிட் இப்ராகிம், மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் புறநகர் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்தும் கொடுப்பார்.
முதல் தவணை மந்திரி புசாராக இருந்த காலத்தில் பூமிபுத்ராக்கள் வாழும் உள்பகுதிகளில் அரசு அதிகக் கவனம் செலுத்தவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
“நாங்கள் அதிகக் கவனம் செலுத்தாத ஒரு பகுதி புறநகர் மேம்பாடு. அங்கு சாலைகள் அமைப்பது சிறுகடைகள் கட்டுவது மட்டும் போதாது. அப்பகுதிகளையும் மேம்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கிராமப்புற சமூகத்தின் வருமானத்தைப் பெருக்க வேண்டும்”, என மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் காலிட் கூறினார்.
அதற்கென சில திட்டங்கள் தொடக்கப்பட்டு விட்டன என்றும் அவை முடிவானதும் மாநிலத் தலைவர்கள் அவற்றை விவாதிப்பர் என்றும் அவர் சொன்னார்.
முதல் தவணைக் காலத்தில் சிலாங்கூர் மாநிலம் கண்ட நிதிநிலை சாதனையை மேலும் வலுப்படுத்துவதிலும் காலிட் தீவிரமாக உள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் சிலாங்கூரில், காலிட்டும் அவரின் குழுவினரும் ரிம2.6 பில்லியன் ரொக்கத்தைக் கையிருப்பில் வைத்திருந்தனர்.
“அதை மேலும் உயர்த்த வேண்டும். அதன் பொருட்டு நாங்கள் செய்ததில் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து வருகிறோம்”
தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வுகாண நம்பிக்கை
மாநிலத்தில் தண்ணீர் குத்தகைகளை மாநில அரசே எடுத்துக்கொள்ள முடியும் என்பதில் இப்போது நம்பிக்கை கூடியுள்ளது.
“இவ்விவகாரத்துக்குக் கூட்டரசு அரசாங்கத்துடன் விவாதித்துத்தான் முடிவு காண வேண்டும். இப்போது அது வழிக்கு வரும்போல் தெரிகிறது. இரண்டாம் தவணைக்கும் மக்கள் எங்களையே தேர்ந்தெடுத்திருப்பதால் அது இணக்கப்போக்கைக் காட்டுகிறது. அதைச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்”.
மாநிலத்தில் நிலவும் குப்பை அள்ளும் பிரச்னைக்கும் நீர்விநியோக பிரச்னைக்கும் அம்னோவும் பிஎன்னும்தான் காரணம் என்றவர் குறைகூறினார்.
“இப்பிரச்னைகள் எதனால் வந்தன? அவர்கள்தான் காரணம். அனுபவமும் நிதி வசதியும் இல்லாத ஒரு குத்தகையாளருடன் நீர்விநியோக ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இப்போது பிரச்னைக்கு நாங்கள் தீர்வு காண வேண்டியுள்ளது. குப்பை அள்ளும் குத்தகையை ஆலாம் புளோராவிடம் ஒப்படைத்தார்கள். அதிலும் பிரச்னைதான்”.
அப்பணிகளை மாநில அரசே எடுத்துக்கொள்வது அவசியம் என்றாரவர். அதற்காகக் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை. அப்போதுதான் பணிகளைத் தரமாக செய்ய முடியும்.
ஆட்சிக்குழு அமைப்பதில் தாமதம்
மாநில ஆட்சிக்குழு அமைப்பது தாமதப்படுவது பற்றிக் குறிப்பிட்ட காலிட் அதுவும் நல்லதுக்குத்தான் என்றார்.
“ஆட்சிக்குழுவினரை முடிவு செய்வதற்குக் கூடுதல் காலம் எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். அதன்பின் உடனடியாக வேலையைத் தொடங்கி விடலாம்.
“அதில் அவசரப்பட்டால் பிறகு வாதம், வம்புதான்… சில மாநிலங்களில் ஆட்சிக்குழு அமைக்கப்பட்ட பின்னரும்கூட சச்சரவுகள் தொடர்வதைப் பார்த்திருக்கிறேன். முடிவெடுப்பதில் அவசரம் காட்டக்கூடாது. அது நல்லதல்ல”, என காலிட் கூறினார்.