கட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கலாமா என்று பிகேஆர் ஆராய்கிறது

nasutஇவ்வாண்டு நவம்பரில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலைத் தள்ளிவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

சனிக்கிழமை கட்சியின் பேராளர் கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னரே ஒரு முடிவெடுக்கப்படும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

“அண்மைய தேர்தல் ஒரு முக்கிய போரைப் போன்றிருந்தது. அதில், காலம், சக்தி, பணம் நிறைய செலவானது.  அதன்பின்னர் கட்சி தன்னை வலுப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதாக சிலர் கருதுகிறார்கள்.

“ஆனால் அதனால் பாதகமில்லை, தேர்தல்தான் கட்சிக்கு புத்துணர்ச்சி தரும் என்று தலைவர்கள் தீர்மானித்தால் குறிப்பிட்ட காலத்தில் தேர்தல் நடைபெறும்”, என்று சைபுடின் கூறினார்.

nasut1பிகேஆர் கட்சித் தேர்தல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. கடந்த தேர்தல் 2010, நவம்பரில் நடந்தது. கட்சி அமைப்புவிதிகள் தேர்தல்களைத் தள்ளிவைக்க இடமளிக்கின்றன.

சனிக்கிழமை பிகேஆர் பேராளர் கூட்டம் பெட்டாலிங் ஜெயா, சிவிக் மண்டபத்தில் நடைபெறும். முன்னதாக, வெள்ளிக்கிழமை கட்சியின் இளைஞர், மகளிர் கூட்டங்கள் நடைபெறும்.இப் பேராளர் கூட்டம்  கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றிருக்க வேண்டும்.  பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவதற்காக அது ஒத்திவைக்கப்பட்டது.

பேராளர் கூட்டத்தில் 2,500 பேராளர்களும் பார்வையாளர்களும் விருந்தினர்களும் கலந்துகொள்வார்கள் என சைபுடின் கூறினார்.

 

 

TAGS: