GST-ஆல் ஒவ்வொரு மலேசியனுக்கும் ஆண்டுக்கு ரிம1,000 சுமை!

gstஅரசாங்கம், 7 விழுக்காடு பொருள் மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி)யை நடைமுறைப்படுத்தினால் அதற்காக ஒவ்வொரு மலேசியனும் ஆண்டுக்கு ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டியிருக்கும் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்.

அந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தால், கூட்டரசு அரசாங்கத்துக்கு அது வாக்குறுதி அளித்த ரிம1,200 பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்) வழங்குவதில் பிரச்னை இருக்காது. அந்த வரிவிதிப்பால் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ரிம5,000 வருமானம் கிடைக்கும் என்பதால் ரிம1,200 பண உதவி கொடுப்பது அதற்கு எளிதாக இருக்கும்.

“பிஎன்னுக்கு பெரும் ஆதாயம் கிடைக்கும். இழப்பெல்லாம் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்குத்தான்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

gst 17விழுக்காடு ஜிஎஸ்டி விதித்தால் அரசாங்கத்துக்கு ரிம27 பில்லியன் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா அண்மையில் கூறியிருந்தார்.

இந்த வகை வரிவிதிப்பு பணவீக்கத்தை அதிகரிக்கும். அதனால் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் பாதிக்கப்படுவர்.

“மலேசியாவில் பெரும்பாலான குடும்பங்களுக்கு நியாயமான வருமானம்கூட இல்லை என்பதால், பக்காத்தான் ரக்யாட்டைப் பொறுத்தவரை இந்த வகை வரியைக் கொள்கை அளவில் நிராகரிக்கிறது”, என்றாரவர்.

சராசரி மலேசிய குடும்பங்களில் வருமானத்தில் கிட்டத்தட்ட  சரிபாதி  கடனுக்கே சென்று விடுகிறது. இந்நிலையில் அவர்களின் சுமையை மேலும் அதிகரிக்கக்கூடாது என குவான் எங் கேட்டுக்கொண்டார்.

பக்காத்தான், நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் என்றாரவர்.

TAGS: