ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்; 18 பேர் கைது

Jinjang_rallyமாணவர் போராளி ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஜிஞ்சங் காவல்நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஊர்வலத்தின்போது 18 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக மே 13 ஆம் தேதி போராட்டம் நடத்தியதாக கூறி சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான ஆடாம் அலியை காவல்துறையினர் கைதுசெய்து ஐந்து நாட்களாக தொடர்ந்து தடுத்து வைத்துள்ளனர்.

மாணவர் போராளி ஆடாம் அலியின் கைதைக் கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனக் கோரியும் ஜிஞ்சங் காவல்நிலையத்திற்கு முன்பாக இரண்டாவது நாளாக நேற்றிரவு (22.05.2013) மெழுகுவர்த்தி ஊர்வலம் இடம்பெற்றது. இவ் ஊர்வலத்தின் போது சுமார் 300-க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தின்போது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டவர்களில் சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா உதவியாளர் உட்பட 13 ஆண்களும் 4 பெண்களும் அடங்கும்.

“நமது தேசத்தைக் காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், தேர்தலில் முறைகேடுகள் செய்யவேண்டாம் என்று கூறிய ஆடாம் அலியை கைது செய்துள்ளனர்.

இது இளைய தலைமுறையினரின் எழுச்சி. அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். ஆனால் தேசிய முன்னணி அரசாங்கம் ஆடாம் அலியை கைது செய்வதன் மூலம் மற்றவர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளது” என்று அண்மையில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.