முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதில் கைதி இறந்தார் என்பதை மருத்துவமனை உறுதிப்படுத்தியது

1 hospitalபோலீசாரால் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட என். தர்மேந்திரன் “முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களால்த்தான் இறந்தார்” என்பதை கோலாலும்பூர் மருத்துவமனை (எச்கேஎல்) மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

நேற்றிரவு டாக்டர் சியு சுயு பெங், எச்கேஎல் பிணவறையில் தர்மேந்திரனின் குடும்பத்தாரிடமும் வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரன், லத்திபா கோயா ஆகியோரிடமும் இதைத் தெரிவித்தார். போலீஸ் விசாரணை அதிகாரியும் அப்போது அங்கிருந்தார்.

1 hospital surenமரணத்துக்கான காரணத்தை ஆராய்ந்த மருத்துவ நிபுணர், தர்மேந்திரனின் உடலில் புத்தம் புதுக் காயங்களைக்  கண்டதாகவும் அவை போலீஸ் காவலில் இருந்தபோது அவர் கடுமையான அடி உதைக்கும் சித்திரவதைக்கும் ஆளானார் என்பதைக் காண்பிப்பதாகவும் கூறினார் என சுரேந்திரன் (இடம்) தெரிவித்தார்.

“இறந்தவரின் முதுகுப் புறத்தில் பிரம்பால் அடித்திருக்கிறார்கள் அதற்கான அடையாளங்களையும் மருத்துவர் கண்டிருக்கிறார்.

“காதுகளில் ஸ்டேபல்(staple)பின் கொண்டு குத்தி இருக்கிறார்கள்.

“காதுகள் தவிர கணுக்கால் பகுதியிலும் ஸ்டேபல் பின்கள் காணப்படுகின்றன”, என சுரேந்திரன் கூறினார்.

இவை தொடக்கநிலை விவரங்கள் மட்டுமே. சியு முழு அறிக்கையைத் தயாரிக்க மேலும் சில நாள்கள் ஆகலாம். அப்போது முழு விவரமும் தெரியவரும் என்றாரவர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடாங் செராய் எம்பியான சுரேந்திரன், இது 2009-இல் போலீஸ் காவலில் நேர்ந்த குகனின் மரணத்துக்குப் பின்னர் நிகழ்ந்துள்ள மிகக் கோரமான மரணம் என்று  வருணித்தார்.

இதற்குமுன்னர் கோலாலும்பூர் போலீஸ், குற்றப்புலன் விசாரணை தலைவர் கூ சின் வா-வை மேற்கோள்காட்டி தர்மேந்திரன் மூச்சுத் திணறி இறந்தார் என்று அறிக்கை விடுத்திருந்தது.

ஆனால், போலீசார் இப்போது தர்மேந்திரனின் இறப்பை தண்டனைச் சட்டம் பகுதி 302–இன்கீழ் கொலை என்று வகைப்படுத்தியுள்ளனர்.

நேற்றிரவு பின்னேரம் கோலாலும்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலே விடுத்த அறிக்கை அதைத் தெரிவித்தது.

“அதன்மீது விசாரணை நடத்த புக்கிட் அமான் அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்படுவார்”, என்றவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று இறுதிச் சடங்கு

மருத்துவரின் விளக்கத்தில் தர்மேந்திரன் குடும்பத்தார் திருப்தி கொண்டிருப்பதாகவும் அவர்கள் இன்று உடலைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் சுரேந்திரன் கூறினார்.  இறுதிச் சடங்கு இன்று பின்னேரம் நடக்கும் எனத் தெரிகிறது.

TAGS: