மாற்றரசுக் கட்சி செய்தித் தாள்களின் பிரதிகள் உள்துறை அமைச்சால் பறிமுதல்

1 dailyமாற்றரசுக் கட்சி செய்தித் தாள்களான ஹராகாவையும் சுவாரா அடிலானையும் உள்துறை அமைச்சு பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. பல மாநிலங்களில் அது நிகழ்ந்துள்ளது.

மலாக்கா, நெகிரி  செம்பிலான், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சியின் செய்தித்தாளான ஹராகா டெய்லி பறிமுதல் செய்யப்பட்டதென  ஹராகா இணையச் செய்தித்தளம் கூறியது.

அந்த நாளேட்டின் விற்பனை நிர்வாகி அஹ்மட் பைசல் தாவாங், காலையில் விற்பனை யாளர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் கூறினார்.

அமைச்சின் அதிகாரிகள் அந்நாளேட்டின் பிரதிகளை அள்ளிச் சென்றதோடு விற்பனையாளர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனை இட்டதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

மே 24-26 என்று தேதியிடப்பட்ட, முகப்பில் ‘GST hadiah BN untuk rakyat (ஜிஎஸ்டி- மக்களுக்கு பிஎன்னின் பரிசு)’ என்ற தலைப்புச் செய்தியைக் கொண்ட  வெள்ளிக்கிழமை பதிப்பைத்தான் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்றாரவர்.

1 daily 1மலாக்காவில் 500 பிரதிகளும் கெடா, அலோர் ஸ்டாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோல்,  பிகேஆரின் செய்தித்தாளான சுவாரா கெஅடிலானும் நான்கு மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, 1984ஆம் ஆண்டு பிரசுர, வெளியீட்டுச் சட்டத்தின்கீழ் வரும் பிரசுர உரிமத்தின் நிபந்தனைகளை மீறியதால் நாளேடுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கட்சி செய்தித்தாள்களைக் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே வினியோகிக்கலாம் என்பது நிபந்தனைகளில் ஒன்று.

நேற்று தொடங்கி, நாடு முழுக்க அச்செய்திதாள்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் அதிரடி நடவடிக்கையில் 1408 சுவாரா கெஅடிலான் பிரதிகளும் 1,062 ஹராகா பிரதிகளும் த ராக்கெட் பிரதிகள் 70-உம் பறிமுதல் செய்யப்பட்டன.

“சட்ட விதிகள் மீறப்படாதிருப்பதை உறுதிப்படுத்த இந்நடவடிக்கை தொடரும்”, என உள்துறை அமைச்சின் அறிக்கை கூறியது.

 

TAGS: