வேதமூர்த்தி செய்வாரா?

kulaமு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013.

என். தர்மேந்திரன் அநியாயமாகக் காவல் துறையினரால்  கொடூரமாகக் தாக்கப்பட்டு இறந்துள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன்.

குகனுக்கு பிறகு மிகவும் மோசாமன கொலை என்று பிகேஆர் துணைத் தலைவர் என். சுரேந்திரன் இக் கொலையை வருணித்திருக்கின்றார். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே இப்படி ஒரு படுமோசமான பாதகச் செயலைச் செய்வது வேலியே பயிரை மேய்வதற்குச் சமம்.

இவ்வேளையிலே, புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் துணை அமைச்சரான பி. வேதமூர்த்திக்கு ஒரு வேண்டுகோள். பெரிய எதிர்ப்புக்களும் அவதூறுகளும் உங்களை வந்து தாக்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் உங்களின் திறமையையும், அதிகாரத்தையும் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.

தர்மேந்திரனின் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் அனைத்து போலீஸ் அதிகாரிகளையும், இந்த வழக்கு முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்ய உடனடியாக ஆவண செய்ய வேண்டும். இது வழக்கமாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் செய்யக்கூடிய ஒன்றாக இருந்தாலும் மலேசியாவில் அபூர்வமாகவே செயலாக்கம் காணும் ஒன்றாகும்.

இந்தியர்களுக்காவே சிறப்பு துணை அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் வேதமூர்த்தி, தடுப்புக் காவலில் அதிகமான இந்திய இளைஞர்கள் மரணமடைவதைத் தீர்க்க அரசாங்கம் தீர்க்கமான ஒரு  முடிவை எடுக்க வேண்டும் என்று கடுமையாக போரடி வந்துள்ளார். அதனையே தன்னுடைய கோரிக்கைகளில் ஒன்றாகவும் முன் வைத்திருந்தார்.

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வேதமூர்த்தி ஒரு வாய்ப்பாகவும் சவாலாகவும் ஏற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் அவர் மேல் நம்பிக்கை வைத்து இப்பெரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கும் பிரதமர்  நஜிப்புக்கும், அவரின் தொண்டர்களுக்கும் பெருமை உண்டாகும். அவரை எதிர்ப்பவர்களுக்கும்  இது ஒரு வாய்ப்பூட்டாகவும் அமையும். அதோடு பதவி ஏற்ற உடனேயே இந்த காரியத்தைச் செய்தால் அவர் வாய்ப் பேச்சு வீரரல்ல, செயல் வீரரும் கூட என்பதனை மக்களுக்கு உணர்த்தும்.

இந்தச் சந்தர்ப்பத்தை அவர் நழுவவிட்டால், அவர் ம.இ.காவில் போய்ச் சேர்ந்துவிடுவது நல்லது. துணை அமைச்சர் வேதமூர்த்தி அதனைச் செய்வாரா!

 

TAGS: