டாத்தாரான் பிஜேயில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியது

PJ Rallyநாடுதழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட எட்டு தொடர் வரிசை கறுப்பு 505 பேரணியின் ஒன்பதாவதும் இறுதியுமான “மக்கள் கூட்டம்” என்று பெயர் இடப்பட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) டாத்தாரான் பிஜேயில் மாலை மணி 5.00 க்கு தொடங்கி இரவு மணி 11.45 க்கு அங்கு குழுமியிருந்த மக்கள் நெகாராகு கீதம் பாட முடிவிற்கு வந்தது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட எட்டு பேரணிகளில் மிகப் பெரியது மே 8 இல் கிளானாஜெயா அரங்கில் நடைபெற்றதாகும். அரங்கிலும் அதனைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிலும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. 120, 000 க்கும் கூடுதலான மக்கள் பங்கேற்றிருந்தனர் என்று கூறப்பட்டது.

டத்தாரான் பிஜே அரங்கில் 80,000 க்கு மேற்பட்டோர் நிற்பதற்கான இடவசதி உள்ளது. அதற்கு வெளியிலும் மக்கள் கூட்டம் பெருமளவில் திரண்டிருந்தது.

இப்பேரணியின் முக்கிய நோக்கம் நடந்து முடிந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் காணப்பட்ட தேர்தல் மோசடிகளுக்கும், தவறான நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாகும்.

இப்பேரணிக்கு ஏற்பாடு செய்த அரசு சார்பற்ற அமைப்புகளில் முக்கியமானது சோலிடேரிட்டி அனாக் மூடா மலேசியா (SAMM) ஆகும்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட பேரணிகளுக்கு அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டம் 2012 (பிஎஎ) இன் கீழ் போலீசாருக்கு போதுமான முன்னறிவிப்பு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பேரணி ஏற்பாட்டாளர்களில் பலர் விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இன்றையப் பேரணி ஒரு சினமூட்டும் செயல் என்று கூறிய உள்துறை அமைச்சர் அஹமட் ஸாஹிட் ஹமிடி, அது  பிஎஎ சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை என்றும் கூறினார்.

PJ Rally1பேரணியின் இறுதிக் கட்டத்தில் உரையாற்றிய பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் பக்கத்தான் ரக்யாட் அரசாங்கம் அமைக்க இயலாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தார்”

“இதனால், நமது திட்டங்களில் பலவற்றை அமலாக்கம் செய்ய முடியாது”, என்று அவர் கூறினார்.

இருந்தாலும், பக்கத்தான் விட்டுக் கொடுக்காது. பாரிசாந்தான் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றாரவர்.

வெல்ளை மாளிகை பிரதமர் நஜிப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது, ஆனால் ஒரு நிபந்தனையைக் கொண்டுள்ளது: தேர்தல் சுதந்திரமானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.

“அதனால்தான் தேர்தல் ஆணையம் இப்போதே பதவி துறக்க வேண்டும்! இப்போதே! இப்போதே! என்று அன்வார் முழங்கினார். கூட்டத்தினரும் அவருடன் சேர்ந்து “இப்போதே” என்று முழக்கமிட்டனர்.

மேலும், இன்னும் பல இருட்டடிப்பு 505 பேரணிகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அமைதியாக நடத்தப்படும் என்றாரவர்.

பிற்பகல் மணி 3.00 லிருந்து மக்கள் டத்தாரான் பிஜேயில் கூடத் தொடங்கினர். மணி 5.15 அளவில் நிகழ்ச்சி அறிவிப்பாளர் இன்று பேரணி நடத்தப்படுவதற்கான மூன்று முக்கிய காரணங்களைக் கூறினார்:

1. தேர்தல் ஆணையம் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுதல்.

2. தேர்தல் மோசடி நடந்த தொகுதிகளில் மறு தேர்தல் நடத்துவதை வலியுறுத்தல்.

3. வாக்குகளிப்பில் நடந்த மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க பெர்சே அமைத்துள்ள விசாரணைக் குழுவுக்கு ஆதரவு தெரிவித்தல்.

இப்பேரணியில் உரையாற்றிய பினாங்கு துணை முதலமைச்சர் ரஷிட் ஹன்சார் பொது மக்களின் 51 விழுக்காடு வாக்குகளைப் பெற்ற பக்கத்தான் தேர்தலில் வெற்றி பெற்றது என்றார். “நாம் தோற்று இருப்பினும், உண்மையில் நாம்தான் வெற்றி பெற்றவர்கள்” என்று அவர் கூறினார்.

“ஏமாற்றினால் தெருவில் இறங்குவோம்”

“தேர்தல் ஆணையம் ஏமாற்றினால், நாம் தெருவில் இறங்குவோம் என்று பொதுத் தேர்தலுக்கு முன்பேPJ Rally2 கூறியுள்ளோம். இது மக்களின் உரிமை” என்று இப்பேரணியில் பேசிய “கேளுங்கள், கேளுங்கள், கேளுங்கள்” புகழ் மாணவி கே. எஸ். பவாணி கூறினார்.

“நாம் இனியும் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. போதும். மக்கள் மடையர்கள் அல்லர். நாம் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குக் காத்திருக்கப் போவதில்லை.

“நமக்கு அதிகமான நேரம் இல்லை. நாம் மக்களை ஊக்குவிக்க வேண்டியுள்ளது. அனைவரும் பேரணிக்கு வாருங்கள்”, என்று பவாணி வேண்டுகோள் விடுத்தார்.

“அழியா மை ஒன்றே போதும்”          

இரவு மணி 10.20 க்கு பேரணியில் உரையாற்றிய பெர்சே இயக்கத்தின் தலைவர் அம்பிகா தாம் இன்று இப்பேரணியில் பேசுவதற்கான திட்டம் ஏதும் இல்லை. ஆனால், சமீபத்தில் தியான் சுவா, ஹேரிஸ் இப்ராகிம் மற்றும் தாம்ரின் காஃபார் ஆகியோர் கைது செய்யப்பட்ட விவகாரம் தம்மை இங்கே கொண்டு வந்துள்ளது என்றார்.

“தேர்தல் ஆணையத்திடம் பெருந்தன்மை ஏதேனும் மிஞ்சி இருந்தால், அது இப்போதே பதவி துறக்க வேண்டும்.  அழியா மை ஒன்றே போதுமான காரணம்,” என்று அவர் கூறினார்.

தேர்தல் மோசடிகள் குறித்த ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் பெர்சேயின் மக்கள் நீதிமன்றத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அம்பிகா வலியுறுத்தினார்.

இப்பேரணியில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவான் சுவா மற்றும் பலர் உரையாற்றினர்.

TAGS: