கண்டனக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிலர் எல்லைமீறிச் செல்ல முடியாமல் இருப்பது குறித்து வெறுப்புற்றிருந்தாலும் தேர்தல் மோசடிக்கு எதிராக நடத்தப்படும் பேரணிகள் எப்போதும் அமைதிப் பேரணிகளாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.
“நாம் (பேரணிகளில்) ஊர்வலம் செல்லப்போவதில்லை என அறிவித்தவுடன் ஏமாற்றமடைந்த சில ஆயிரம் பேர் திரும்பிச் செல்வதைப் பார்த்திருக்கலாம்.
“அவர்கள் ஒன்றுகூடுவதற்கும் அப்பால் செல்ல விரும்புகிறார்கள்…….ஆனால், எல்லாம் ஒழுங்குடன் நடக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை”. அன்வார், இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார்.
பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் பேரணி நடந்த இடங்களில் இருந்த போலீசார் நல்ல முறையிலேயே நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டு அதற்காக அவர்களுக்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.
“முன்பு பெர்சே பேரணிகளில் நடந்துகொண்டதுபோல் சினமூட்டும் செயல்களில் ஈடுபடவில்லை. அதற்காக நன்றி தெரிவிக்கிறோம். சினமூட்டும் நடவடிக்கைகள் இனியும் இருக்காது என்றே நம்புகிறோம்”, என்று கூறியவர் போலீசார் குற்றச் செயல்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேர்தல் மோசடிக்கு எதிரான “கறுப்பு 505” பேரணிகள் வரிசையில், மே 25 பெட்டாலிங் ஜெயா பேரணி இறுதிப் பேரணியாக இருக்காது என்று குறிப்பிட்ட அவர் மக்கள் விரும்பும்வரை பேரணிகள் தொடரும் என்றார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் (வலம்), தெரு ஆர்ப்பாட்டங்கள் குழப்பத்துக்கு வழிகோலும் என்று கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்த அன்வார், “எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாராக் அப்படித்தான் சொன்னார். அதற்குமுன்பு (சிம்பாப்வே அதிபர்) முகாபேயும் (பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினண்ட்) மார்கோசும் அதையேதான் சொன்னார்கள். அதையே மகாதிரும் சொல்வதைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை”.
அழியா மையைக் கொண்டுவரத் தவறிய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பக்காத்தான் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேர்தல் முறையீடுகளைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்வாரும் துணைவியாரும் போலீசில் புகார்
அழியா மை, வாக்களித்த நாளிலேயே அழிந்துபோனதாக அன்வாரும் அவரின் துணைவியாரும் பிகேஆர் தலைவருமான வான் அசிசா வான் இஸ்மாயிலும் இன்று ட்ரோபிகானா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
“ஆயிரக்கணக்கான மலேசியர்கள் இதைப் பற்றிப் போலீசில் புகார் செய்திருப்பதாக நினைக்கிறேன். அவர்களுடன் இன்று நானும் அசிசாவும் சேர்ந்துகொள்கிறோம்.
“நான் காலை மணி 9.30க்கு வாக்களித்துவிட்டுக் கைகளைக் கழுவினேன். அதன்பின்னர் பார்த்தால் கறுப்பு மை இருந்ததற்கான அடையாளமே விரலில் இல்லை”, என்றார்.
அது பற்றி 100,000 போலீஸ் புகார்களைச் செய்யும் இயக்கம் ஒன்றை பிகேஆர் தொடங்கியுள்ளது. அழியா மை ஐந்து நாளானாலும் அழியாது என்று இசி கூறி இருந்தாலும் சில மணி நேரத்திலேயே அதைக் கழுவ முடிந்தது. எனவே, இசி மிகப் பெரிய பிழையைச் செய்திருக்கிறது என்பதை உணர்த்துவதே அவ்வியக்கத்தின் நோக்கமாகும்.
“அது நிரந்தரமானதல்ல என்பதை அறிந்தபோதிலும் மலேசிய மக்களை அவர்கள் ஏமாற்ற முனைந்தார்கள்” என்று வான் அசிசா கூறினார்.
நானும் என் மனைவியும் நேற்று – ஞாயிறு அன்று ஸ்ரீ GOMBAK போலிஸ் நிலையத்தில் போலீஸ் புகார் செய்து விட்டோம். நீங்கள் எப்படி??