மே 5 பொதுத்தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக புகார் செய்யும் அல்லது அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கும் தரப்பு எதுவானாலும், அது பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியாக இருந்தாலும்கூட அவர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் (இசி) தயாராக உள்ளது.
ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை என்ற தப்பான எண்ணம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்வதாக இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் கூறினார் என மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.
“உறுதியான ஆதாரங்கள் இருந்து போலீஸ் புகார்களும் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்தவர்களைச் சந்தித்து பிரச்னைகளைக் கேட்டறிய தயாராக இருக்கிறேன்.
“சந்திப்பது நல்லது. அதன்வழி தப்பெண்ணங்களைப் போக்கலாம். இசியைப் பொறுத்தவரை அதன் கடமையை நேர்மையாகச் செய்து வருகிறது” என்று வான் அஹ்மட் கூறினார்.
வாக்களிப்பு நாளன்று கெடா, செடிமில் மின் தடை ஏற்பட்டதாக ரபிஸி (இடம்) போலீசில் புகார் செய்யப்பட்டிருப்பதாக நேற்று கூறி இருந்தது பற்றிக் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார். மின் தடை 15 நிமிடம் நீடித்தது.
‘இசி போலீசுடன் ஒத்துழைக்கத் தயார்’
தேர்தல் மோசடி தொடர்பான விசாரணைகளில் போலீசுடன் ஒத்துழைக்க இசி ஆயத்தமாக இருப்பதாகவும் வான் அஹ்மட் குறிப்பிட்டார்.
“போலீசில் புகார் செய்வது நல்லது. போலீஸ் விசாரிக்கட்டும். நாங்களும் ஒத்துழைக்க தயார். 26,000 வாக்களிப்பு மையங்களில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணி புரிந்தனர். அவர்களில் சிலர், பிரச்னைகள் நிகழ்ந்து அதை இசிக்குத் தெரியப்படுத்துவதில் கவனக்குறைவாக இருந்திருக்கலாம்”, என்றாரவர்.
தாம் இதற்குமுன் விடுத்த அறிக்கைகள், வாக்களிப்பு முடிந்து 24 மணி நேரத்துக்குள் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்றவர் விளக்கினார்.
“வாக்களிப்பு நாள் முடிந்தவுடன் எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நான் அந்த அறிக்கைகளை விடுத்திருந்தேன். எங்கள் பணியாளர்கள், தெனாகா நேசனல் பெர்ஹாட், போலீஸ் ஆகியோரைத் தொடர்புகொண்டு பேசினோம். மின் தடை பற்றி எவரும் தெரிவிக்கவில்லை.
இசி எத்தனை 10ஏ பாரங்களை விநியோகித்தது என்று அறிவிக்க வேண்டும் என்ற ரபிஸி-இன் கோரிக்கை பற்றிக் கருத்துரைத்த வான் அஹ்மட், ஆணையம் விநியோகம் செய்த பாரங்களின் மொத்த எண்ணிக்கை பற்றி முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றார். இசி, இப்போது தேர்தல் முறையீடு போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே, பெரித்தா ஹரியான் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி, கெடா இசி இயக்குனர் ஜுஹாரி அப்துல் ரஹ்மாட் , கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணும்போது மின் தடை ஏற்பட்டதாக ரபிஸி கூறி இருப்பதை மறுத்தார் என்று கூறுகிறது.
மின் தடை பற்றியும் ஆவி வாக்காளர்கள் பற்றியும் எந்த ஒரு புகாரையும் தாம் பெறவில்லை என்று ஜுஹாரி கூறினார்.
ஐயோ பாவம் இவருக்கு ஒண்ணுமே தெரியாது……