சிரியா எதிரணி மீதிருந்த ஆயுதத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கியது

hague_eu_syria_embargoசிரியாவின் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்துவந்த தடையை விலக்கிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.

ஆனால் சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உடனடியாக ஆயுதங்களை அனுப்பிவைக்கும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

சிரியா சம்பந்தமான மற்ற அனைத்து தடைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், இது சம்பந்தமான அடுத்த கட்ட பரிசீலனையை உறுப்பு நாடுகள் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்னர் மேற்கொள்வர் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் டலைமை ராஜீய அதிகாரியான கேதரின் ஆஷ்டன் கூறினார்.

பிரிட்டனும் பிரான்சும் தந்த அழுத்தத்தால்தான் ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவுக்கு வந்தது என்று தெரிவிக்கப்படும் கூற்றுக்களை அவர் மறுத்தார்.

சிரியாவின் அரசாங்கம் நிஜமான சிரத்தையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாக வேண்டும் என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்பவேண்டியது முக்கியம் என பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறினார்.

அதிபர் அஸ்ஸாத்தை எதிர்ப்பவர்களில் மிதவாதிகளாகப் பார்த்து அவர்களுக்கு ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று பிரான்சும் பிரிட்டனும் வலியுறுத்தி வந்தன.

ஆனால் அந்த நகர்வுக்கு மற்ற ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்படிச் செய்தல் அந்நாட்டில் வன்முறைச் சூழல் மேலும் மோசமடையத்தான் செய்யும் என்று அவர்கள் வாதிட்டனர்.