நஜிப்பின் போக்கைச் சாடுகிறார் ஜைனுடின்

1 umnoபிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அம்னோவில் சிலர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது சேர்ந்து கொண்டிருப்பவர் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின்.

ஜைனுடின்,  ‘ஜம்கத்தா (Zamkata)’  என்னும் தம் வலைப்பதிவில், மக்கள் செல்வாக்குள்ள தலைவராக தம்மைக் காண்பித்துக்கொள்ள நஜிப் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் அவரை ஒரு அரசதந்திரியாகக் காட்டாமல் ஒரு “போலியாகத்தான்”காண்பிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

பிஎன்னைப் பலகட்சிக் கூட்டணியாக அல்லாமல் பல இனங்களைப் பிரதிநிதிக்கும் ஓரே கட்சியாக மாற்றுவது பற்றிய ஆலோசனை அம்னோ தலைவர்கள் “அரண்டுபோயிருப்பதை”க் காண்பிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

“முக்கியமான முன்மொழிவுகளை நிலைமை அமைதியாக இருக்கும்போதுதான் எண்ணிப்பார்க்க வேண்டுமே தவிர, குழப்பான சூழலில் அதைச் செய்யக்கூடாது…..இது அதற்கான தருணமல்ல”, என்று  ‘ஜாம்’ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும்  ஜைனுடின் (இடம்) கூறினார்.

1 umno113வது தேர்தல் பரப்புரைகளின்போது பரவலாக விநியோகிக்கப்பட்ட ‘I Love PM’ (பிரதமரை நேசிக்கிறேன்) என்ற வாசகத்தைக் கொண்ட பதாகைகளையும் அவர் சாடினார். அது நஜிப்பின் ஆலோசகர்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும்.

அதனால் ஏற்பட்ட பலன் ஒன்று மட்டுமே- அது, தமக்கு எல்லா இனத்தவர் ஆதரவும், குறிப்பாக சீன மலேசியர்களின் ஆதரவும் இருப்பதாக நம்பி நஜிப்பை “மெய்மறக்க” வைத்தது.

நஜிப்பை சாதாரண மக்களில் ஒருவராகக் காண்பிக்க முயன்று அவரை தெருவோரக் கடைகளின் பக்கத்திலும் அங்காடிகள் உள்ள இடங்களிலும் உலவ விட்டார்கள். அது பார்க்க வேடிக்கையாக இருந்தது. ஏனென்றால், “மேட்டுக்குடிமகனான” அவர் அப்படிப்பட்ட இடங்களில் அதற்குமுன் காட்சி தந்ததே இல்லை.

“கூடவே மெய்க்காவலர்களும் உதவியாளர்களும் வந்தது பார்ப்பதற்கு இன்னும் வினோதமாக இருந்தது. எல்லாமே போலித்தனம் என்பதையும் உணர்த்தியது”.

‘பிரதமரை நேசிக்கிறேன்’ என்ற வாசகங்களைப் பார்க்க “வெறுப்பாக இருக்கிறது” என்று கூறும் பல குறுஞ் செய்திகள் தமக்கு வந்திருப்பதாகவும் அவர் சொன்னார். பிரதமர் ஒரு மாணவத் தலைவர் போல நடந்துகொள்வதை விட்டொழிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

நாடு இன்னும் அரசியல் அச்சுறுத்தலிலிருந்து விடுபடவில்லை என்பதை நஜிப் உணர வேண்டும். “தலைமை விகடகவி மற்றும் சீன இனவாதி”களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். ஆனால், அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

“கம்முனிஸ்டு கையாள்களால் நம் பாதுகாப்பு மிரட்டப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கறுப்பு உடை தரித்த சீனர்கள் சட்டப்படியான தேர்தலைக் களங்கப்படுத்தி வருகிறார்கள்; மின் தடைகள் நிகழ்ந்ததாகவும் அழியா மையை அழிந்துவிட்டது என்றும் பொய்ப் புகார்கள் செய்யப்படுகின்றன”, என்றார்.

அப்போது ஹலால், இப்போது ஹராமா?

முன்னாள் உத்துசான் மலேசியா தலைமை செய்தி ஆசிரியரும் 2006-இல் தொக்கோ வர்தாவான் (Tokoh Wartawan) விருது பெற்றவருமான ஜைனுடின், மைய நீரோட்ட ஊடகங்களின் செய்தித் தரத்தையும்  மாற்றரசுக் கட்சி செய்தித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சாடினார்.

1 umno 3த ஸ்டார் போன்ற செய்தித்தாள்கள் மாற்றரசுக் கட்சிகள் கூறும் மின் தடை விவகாரத்தைப் பெரிய விவகாரம்போல் கருதி செய்தி வெளியிடுகின்றன. அடிக்கடி அதையே சொல்லி வந்தால் மக்கள் அதை உண்மை என்றே நம்பி விடுவார்கள் என்றார். அதுதான் அந்தக் கட்சிகளின் நோக்கமுமாகும்.

மாற்றரசுக் கட்சி செய்தித்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.

முன்னாள் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் காலத்தில் “ஹலாலாக” இருந்தவை  அஹ்மட் ஜாஹிட் ஹமிடி புதிய உள்துறை அமைச்சர் ஆனதும் “ஹராமாக” மாறியதை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது.

“இதுவரை கிடைத்து வந்த ஒன்றுக்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செய்கைகள்தாம் நம் ஜனநாயகத்தில் ஏதோ கோளாறு என்று மக்களை நினைக்க வைக்கும்”.

 

 

 

TAGS: