இசி, பேசுவதற்கு நேரமில்லை, நீதிமன்றத்தில் சந்திப்போம்

1 ecஉங்கள் கருத்து:  ‘சமசரத்துக்கு இடமில்லை. இசி தலைவர்கள் போகத்தான் வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்துவதில் பயனில்லை.  அதுதான் பேச வேண்டியதையெல்லாம் தேர்தலுக்குமுன்பே பேசி விட்டோமே’

தேர்தல் மோசடி என்று கூறப்படுவதன் தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார்

நியாயவான்: தேர்தல் ஆணையம் (இசி) உண்மையிலேயே பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியைச் சந்திக்க விரும்புகிறதா? இப்போது ஆதாரங்களுக்குமேல் ஆதாரங்கள் காண்பிக்கப்படுவதாலும் நிறைய போலீஸ் புகார்கள் செய்யப்படுவதாலும் இசி முந்தைய நிலைபாட்டிலிருந்து பின்வாங்கி “சந்திப்போம், பேசுவோம்” என்கிறது.

முதலில், மறுப்புத் தெரிவித்த இசி, எதிர்ப்புப் போக்கைக் காட்டிய இசி, இப்போது இணங்கி வருவது ஏன்? உண்மையின் கை மேலோங்கி விட்டது மேலும் மறுப்பதில் பயனில்லை என்பதை  உணர்ந்துகொண்டதாலா?

ரபிஸி அவர்களே, இசி மக்களை ஏமாற்ற இடமளித்து விடாதீர்கள்.

பெயரிலி #33877536: இசி, நீங்கள் மறுக்கலாம். மறுத்துக்கொண்டே இருக்கலாம். புகார்கள் ஒன்றா இரண்டா, நூற்றுக்கணக்கில் உள்ளன. எல்லாமே பொய்யாகி விடுமா?

பால் டினோ:  சமசரத்துக்கு இடமில்லை. இசி தலைவர்கள் போகத்தான் வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்துவதில் பயனில்லை.  அதுதான் பேச வேண்டியதையெல்லாம் தேர்தலுக்குமுன்பே பேசி விட்டோமே.

போப்: இசி சந்திக்க முன்வந்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மைகளை அது ஒப்புக்கொள்ள அது தயாரா? டிவி3-க்கும், எஸ்ட்ரோ அவானிக்கும், பெர்னாமாவுக்கும் உத்துசான் மலேசியாவுக்கும் ஓடோடிச் சென்று எல்லாமே இட்டுக்கட்டப்பட்டவை என்று சொல்ல மாட்டீர்களே?

டாக்டர்:  “இசி, அதன் கடமையைச் செவ்வனே செய்தது” என்கிறார் இசி துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார். வான் அஹ்மட் அவர்களே, உங்கள் கடமைதான் என்ன?

மோசடி செய்தாவது 13வது பொதுத் தேர்தலில் அம்னோவை வெற்றிபெற வைப்பதும், மலேசிய ஜனநாயகத்தைச் சீரழிப்பதும், வாக்குச் சீட்டின் புனிதத்தை நாசப்படுத்துவதும்தான் உங்கள் கடமையா?

கவனம்:  பெர்சே அம்பிகா கூறியதுபோல், “அழியா மை ஒன்று போதும் மோசடி நடந்துள்ளதை நிரூபிக்க”.

ஆம். அந்த மை ஒன்று போதும். அதற்கே நிறைவளிக்கும் விளக்கத்தைக் கொடுக்க முடியவில்லையே.

மின் தடை பற்றி இசி அதிகாரிகள் புகார் செய்யவில்லை என்கிறீர்களே, மின் தடைக்கு ஏற்பாடு செய்தவர்களே அவர்கள்தானே, பிறகு எப்படி புகார் செய்வார்கள்?

ரபிஸி, அவர்களைச் சந்திக்க வேண்டாம். அதனால் நேரம்தான் விரயமாகும். முன்னர் சொன்னதையே திரும்பச் சொல்வார்கள். நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லட்டும்.

கன நீர்: இசி ஆணையர்கள் அத்தனை பேரும் பணி விலக வேண்டும். புதிய இசி அமைந்து அது எல்லாப் பிரச்னைகளையும் பரிசீலிக்க வேண்டும். நடப்பு இசி, செய்த தவறுகளையோ ஊழல்களையோ ஒப்புக்கொள்ளாது என்பது நிச்சயம்.

என்ன ஆச்சு: ரபிஸி, விழிப்புடன் இருங்கள். இந்த ஏமாற்றுப் பேர்வழிகள் திடீரென்று சந்திப்பு நடத்த முன்வருகிறார்கள், பேச்சு நடத்த வருகிறார்கள். சந்தித்துப் பேசும் நேரமெல்லாம் கடந்து விட்டது. இசி கோமாளிகள் இருவரும் பதவி விலக வேண்டும்.

தேர்தலுக்குமுன் பேச முன்வரவில்லை. அழியா மையைக் காண்பிக்க தயாராக இல்லை. தேர்தல் முடிந்து முறைகேடுகள் பற்றிய புகார்களை, ஆதாரங்களுடன் காண்பித்தபோதும் மறுத்தார்கள்.  புகைப்படங்கள் ஜோடிக்கப்பட்டவை என்றார்கள்.

அப்படிப்பட்டவர்களுடன் இப்போது பேச்சு நடத்துவது கால விரயம்.

 

TAGS: